சசிகலாவின் பதவிக்கு ஆப்பு? தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் சமர்பித்த ஆவணங்கள் வெளியாகின
அதிமுக-வில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது என தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு சமர்பித்த ஆவணங்களின் தகவல்கள் பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக நிலவி வரும் குழப்பம் ஆகியவைக் குறித்து தீர்வு பெற தேர்தல் ஆணையர் நசிம் சைதியை சந்திப்பதற்கு முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.
மேலும் கட்சிவிதிப்படி சசிகலாவின் நியமனம் செல்லாது என்றும் டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால், அவரது மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் பன்னீர்செல்வம் தரப்பு சமர்பித்த ஆவணங்களின் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுக-வில் கிடையாது. அப்படி இருக்கும்போது, அவர் உத்தரவுகள் யாவும் செல்லாமல் ஆகின்றது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி.தினகரன் ஒரே நாளில் சேர்க்கப்பட்டு துணைப் பொதுச் செயலாளர் பதவியும் அளிக்கப்பட்டது முறைகேடானது.
அவர் மேல் ஃபெரா வழக்கு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் தேர்தல், தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் நடக்க வேண்டும். உண்மை அதிமுக நாங்கள்தான் என்று பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.