கோஹ்லியை அணியில் இருந்து நீக்கும் முடிவை தடுத்த டோனி: உண்மையை போட்டு உடைத்த ஷேவாக்
2012ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப் பயணம் செய்து, 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது.
அப்போது, மெல்பர்னில் நடந்த முதல் டெஸ்டில் கோஹ்லி முதல் இன்னிங்சில் 11 ஓட்டங்கள், 2வது இன்னிங்சில் டக்கவுட்டுமானார்.
அதேபோல் சிட்னியில் நடைபெற்ற 2வது டெஸ்டிலும் விராட் கோஹ்லி, சாதிக்கவில்லை. அவர் முதல் இன்னிங்சில் 23 ஓட்டங்களும், 2வது இன்னிங்சில் 9 ஓட்டங்களும் எடுத்தார்.
இதனால் பெர்த்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கோஹ்லியை நீக்கிவிட்டு அவர் இடத்தில் ரோஹித் ஷர்மாவை விளையாடச் செய்ய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆனால் அப்போது டெஸ்ட் அணி தலைவராக இருந்த டோனியும், துணை தலைவராக இருந்த ஷேவாக்கும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரையே விளையாட வைத்துள்ளனர்.
இதனால் பெர்த் டெஸ்டில் கோஹ்லி 44 மற்றும் 75 ஓட்டங்களை எடுத்தார். அடிலெய்டில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை விளாசினார் கோஹ்லி.
தற்போது தொடர்ந்து அசத்தி வரும் கோஹ்லி இன்று உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக ஜொலிக்கிறார். அதுமட்டுமல்லாது இந்திய டெஸ்ட் அணியின் தலைவராகவும் முன்னேறியுள்ளார்.
மொகாலியில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை டிவியில் வர்ணனை செய்த போது இந்த தகவலை ஷேவாக் தெரிவித்தார்.