கோட்டையில் பனிப்போர் நடத்தும் சசிகலா, பன்னீர்செல்வம்?
முதல்வர் பன்னீர்செல்வம் இன்று 25 துறைகளின் சார்பில் வட மாவட்டங்களில் கட்டப் பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் புதிய தொழிற் சாலைகளை ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் திறந்து வைக்கிறார்.
இந்நிகழ்ச்சி சென்னை எழும்பூர் குழந்தை நல மருத்துவ மனையில் நடைபெற உள்ளது. பொதுவாக திறப்பு விழா நிகழ்ச்சி தலைமை செயலகத்தில் முதல்வர் அறையில் நடைபெறும்.
ஆனால், அந்த அறையை பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என சசிகலா உத்தர விட்டதால் விழா எழும்பூருக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதற்கிடையில், கட்சி நிர்வாகிகளை சந்திக்க சசிகலா வந்தபோது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நடந்த அரங்கிற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இது, பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, மீனவர் பிரச்னை தொடர்பாக அவர் பிரதமருக்கு கடிதம் எழுத பதிலுக்கு சசிகலாவும் கடிதம் எழுதினார். மேலும், தன் கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியான பிறகே பன்னீர்செல்வம் கடிதம் வெளியிடப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக, 9ம் திகதி முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமருக்கு கடிதம் எழுதினார். நேற்று சசிகலா கடிதம் எழுதினார். அந்த கடிதத்தை தான், அதிமுக எம்பிக்கள் டில்லியில் மத்திய அமைச்சரிடம் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு நடைபெற்று வரும் மாறுபட்ட செயல்பாடுகளால், சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் ஆகிய இருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தமிழக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.