உயிர்த்த ஞாயிறுதின குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
சுவிற்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. அசாத் மௌலானாவுக்கு எதிராக முறைப்பாடளிக்க பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அழுத்தம் பிரயோகித்ததாக குறிப்பிடுமாறு சாய்ந்தமருது பொலிஸார் அசாத் மௌலானாவின் மனைவிக்கு ஏன் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும். இதன் பின்னணியில் உள்ள அரச சக்தி என்னவென்பதை அரசாங்கம் வெளிப்படையுடன் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.