ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 200 கோடி ரூபாய் பணத்துடன், அவரது உயில் உள்ளிட்ட ஆவணங்களும் கொள்ளை போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 24 ஆம் திகதி மூன்று கார்களில் திடீரென நுழைந்த கும்பல், அங்கிருந்த காவலாளி ஓம் பகதூர் என்பவரை கொலை செய்ததுடன், கிருஷ்ண பகதூர் என்ற காவலாளியை கடுமையாக தாக்கியது.
பின்னர், எஸ்டேட் பங்களாவுக்குள் நுழைந்து, கண்ணாடிகளை அடித்து நொறுக்கி கொள்ளையடித்து சென்றதாக கூறப்பட்டது. அந்த பங்களாவில் என்னென்ன இருந்தது? என்று யாருக்கும் தெரியாததால், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால், 5 கைக்கடிகாரங்கள் மட்டுமே திருடப்பட்டதாகவும், அதுவும் அங்குள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், தமது ஊரான சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
மற்றொரு குற்றவாளியான கேரளாவை சேர்ந்த சயான் என்பவர், அதே நாளன்று திருச்சூர் அருகே, கார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் இருந்து 3 சூட்கேசுகள் மாயமானதாகவும், அதில் 200 கோடி ரூபாய் பணமும், ஜெயலலிதாவின் உயில் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், விபத்தில் சிக்கிய சயானின் காரில் இருந்தே கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பாதுகாப்பு நிறைந்த ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில், எந்த அறையில் என்ன இருக்கிறது என்பது, அந்த பங்களா பற்றி அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
மேலும், அந்த சம்பவத்தில் தொடர்பு உடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இருவருமே, சொல்லி வைத்தது போல், ஒரே நாளில் விபத்தில் சிக்குகின்றனர். அதில் ஒருவர் உயிர் இழந்து விட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவம், பணத்திற்காக மட்டும் அரங்கேறவில்லை என்றும், ஜெயலலிதா எழுதி வைத்துள்ள உயில் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றவே நடந்துள்ளது என்றும் பலர் சந்தேகிக்கின்றனர்.
ஜெயலலிதாவின் சொத்து விவரங்கள் மற்றும் கொடநாடு எஸ்டேட் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் மட்டுமே, இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்க முடியும் என்று பலரும் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், தமிழகம் மற்றும் கேரளா என இரு மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருப்பதால், சி.பி.ஐ விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தகவல்கள் வெளிவரும் என்று கருதப்படுகிறது