கொல்லப்படுவதற்கு முன் போலீஸ்காரரின் மனதை உருக்கும் பதிவுகள்…!!
அமெரிக்காவின் பாடன் ரூஜ் பகுதியில் நேற்று கருப்பினத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.
இதில் கொல்லப்பட்ட மூத்த காவல் அதிகாரி மான்ட்ரெல் ஜாக்சன் (கருப்பினத்தவர்), சுட்டுக்கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்ட பேஸ்புக் பதிவு அனைவரது மனதையும் கலங்கச் செய்துள்ளது.
சமீபத்தில் பாடன் ரூஜ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவரை அமெரிக்க அதிகாரி சுட்டுக் கொன்றார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் நாட்டின் பல பகுதியிலும் ‘கருப்பின மக்களின் உயிர் பொருட்படுத்தத்தக்கது’ என்ற போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தின் போது டல்லாஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவரால் 5 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போலீஸாருக்கு எதிராக கருப்பினதத்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாடன் ரூஜ் நகரில் நேற்று மூன்று போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான மான்ட்ரெல் ஜாக்சன் இறப்பதற்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு அனைவரின் மனங்களையும் நெகிழ செய்து வருகிறது.
மான்ட்ரெல் ஜாக்சனின் பேஸ்புக் பதிவு:
“நான் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன். கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் இந்நகரத்தை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்நகரமும் என்னை நேசிக்கிறதா என தெரியவில்லை.
எனது குறுகிய வாழ்க்கையில் நான் நிறைய கற்றிருக்கிறேன். ஆனால், இந்த கடைசி மூன்று நாட்கள் என்னை சோதனைக்கு உட்படுத்திவிட்டது.
வெறுப்பால் உங்கள் இதயங்களை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் அடிமனதிலிருந்து என்னை வெறுத்துவிடாதீர்கள். இன்னும் சில தினங்களில் இந்நகரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.
இந்த பதிவு எழுத்தப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு அவர் கொல்லப்பட்டது அந்த நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மான்ட்ரெல் ஜாக்சனின் பதிவு தற்போது பேஸ்புக்கில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.