விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட போது அப்போதைய இந்திய துணை ஆய்வாளராக இருந்த நந்தகுமார் அன்றைய நாளில் நடந்தவற்றை அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு விபரித்துள்ளார்.
இதன் போது மேலும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
1982ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி சென்னை பாண்டி பஜாரில் இரு தரப்பினர்களுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சில பொலிஸாரை அழைத்துக்கொண்டு சென்றேன். அந்த இடத்தில் இருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சண்டையிட்டவர்கள் அருகில் மறைந்திருப்பதாக கூறினார்கள்.
இந்நிலையில், சண்டையிட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தவுடன் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது உடனே பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்களை கைது செய்து அழைத்து வந்த சில மணி நேரத்தில், தமிழக தலைமை பொலிஸ் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது.
இதன் போது “நீங்கள் கைது செய்து அழைத்து வந்தவர்கள் யார் என்று தெரியுமா” என தலைமை காவல் அதிகாரி கேட்டார்.
“ஏதோ இலங்கை தமிழர்கள் என்று கூறினார்கள்” என நான் பதில் கூறினேன். எனினும், அதன் பின்னர் தலைமை பொலிஸ் அதிகாரி கூறியதை கேட்ட போது எனக்கு அச்ச உணர்வே வந்தது.
“நீங்கள் கைது செய்து அழைத்து வந்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்” என தலைமை பொலிஸ் அதிகாரி என்னிடம் குறிப்பிட்டார்.
இதைக் கேட்ட எனக்கு அச்ச உணர்வு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் ஆயுதம் எதுவும் உள்ளதா என கேட்டேன். அவர்களும் கையில் வைத்திருந்த துப்பாக்கியை அமைதியாக கொடுத்தார்கள்.
அதனை பெற்றுக்கொண்ட பின்னர் யோசித்து பார்த்தோம். துப்பாக்கியினை கொண்டு எம்மீது தாக்குதல் நடத்தயிருந்தால் அவர்களை நாங்கள் கைது செய்யாமல் திரும்பவும் ஓடி வந்திருப்போம்.
எனினும், அவர்கள் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும் போது இன்றும் பெருந்தன்மையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.