சச்சின் சாதனையை கோலி முறியடிப்பாரா, ஸ்மித் முறியடிப்பாரா என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம். அவர்களின் ஒவ்வொரு இன்னிங்ஸ்களையும் கிரிக்கெட் பேட் பிடிக்கத் தெரியாதவர்களிலிருந்து நிபுணர்கள் வரை எல்லோரும் அலசிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் சச்சினின் டெஸ்ட் ரன்கணக்கிலிருந்து சுமார் 10,000 ரன் தொலைவில் இருக்கின்றனர். அவ்வளவு தொலைவிலிருந்தும் அவர்களைப் பற்றியே உலகம் பேசக் காரணம் – அந்த இலக்கை நோக்கி புயல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களின் மீதான மோகத்தில் உலகம் மறந்த ஒருவர், சச்சினின் சாதனையை சத்தமில்லாமல் நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஸ்மித்தின் தேசத்தில் 12,000 ரன்களை நெருங்கிக்கொண்டிருக்கிறார். ஸ்மித்தைவிட இரண்டு மடங்கு ரன்கள். 32 சதங்கள். இவரை ஜாம்பவான் என்று யாரும் கொண்டாடியதில்லை. தலைசிறந்த பேட்ஸ்மேன் என்று பெரிய அளவில் புகழ்ந்ததில்லை. சச்சினுக்கு நெருக்கமாக வைத்துப் பேசியதில்லை. ஆனால், சச்சினை நெருங்கிக்கொண்டிருக்கிறார். அலெய்ஸ்டர் குக் – கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்தின் தலைசிறந்த ஓப்பனர்… நிச்சயம் கொண்டாடப்பட வேண்டியவர்!
எப்பேற்பட்ட கிரிக்கெட்டராக இருந்தாலும், எத்தகைய சாதனையைப் படைத்தவராக இருந்தாலும், அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட்டதையே பெருமையாகக் கூறுவார். சச்சினின் ஷார்ஜா சதம்போல! ஏனெனில், ஆஸ்திரேலியர்கள் கிரிக்கெட்டை ஆண்டவர்கள். அதுவே, அவர்களின் சொந்த மண்ணில், சிறப்பாக ஆடியிருந்தால், கடைசிவரை அதை அவர்களால் மறக்கமுடியாது. 6 இரட்டைச் சதங்கள் அடித்துவிட்டார் கோலி. ஆனால், 2014-ம் ஆண்டு அடிலெய்டில் அடித்த சதத்தைத்தான் பலரும் கோலியின் பெஸ்ட் என்பர். ஏன்… கோலியின் சாய்ஸும் அதுவே. 2 முச்சதங்கள் அடித்த சேவாக்கின் ஸ்பெஷல் இன்னிங்ஸ் – 2003-ல் மெல்போர்னில் அடித்த 195-யைத்தான். அதிலும் மெல்போர்ன்…!
டெஸ்ட் போட்டிகளில் சதமடிப்பது சாதாரண விஷயம்தான். ஆனால், அந்த மைதானத்தில் சதமடிப்பது என்பது ஒரு தவம். சதமடித்து, அவுட்டாக பெவிலியன் திரும்பும் வீரனுக்கு, சுமார் 1 லட்சம் ரசிகர்கள்… ஆம், 1 லட்சம் ரசிகர்கள்… எழுந்து நின்று வாழ்த்துச்சொல்லும்போது… எதிர்நாட்டு ரசிகராக இருந்தாலும், எழுந்து நின்று கைதட்டும் அவர்களைப் பார்த்து, ஹெல்மட்டையும் பேட்டையும் உயர்த்திக் காட்டிவிட்டு வெளியேறும் அந்த பேட்ஸ்மேனுக்கு… 5 விக்கெட்டுகள் வீழ்த்திவிட்டு, எதிரணியை ஆல்அவுட் செய்துவிட்டு, அந்தப் பந்தை 3 விரல்களால் பிடித்து, நான்கு திசைகளில் உயர்த்திக் காட்டி, தன் மொத்த அணியையும் வழிநடத்தும் அந்த பௌலருக்கு… அதைவிட வேறென்ன பெருமை வேண்டும்! லார்ட்ஸ் – கிரிக்கெட்டின் மெக்கா எனில், மெல்போர்ன் கிரிக்கெட்டின் சொர்க்கம்!
டெஸ்ட் போட்டிகளில் 31 சதமடித்திருந்த குக், இந்த மெல்போர்ன் மைதானத்தில் ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்தார். அங்கு 3 போட்டிகள் ஆடியிருந்தார். இரண்டு அரைசதங்கள் மட்டும் அடித்திருந்தார். மெல்போர்னில் என்ன, கடந்த 10 இன்னிங்ஸ்களாக எந்த மைதானத்திலுமே சதமடிக்க முடியாமல்… ஏன், அரைசதமே அடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். ஆண்டு தொடக்கத்தில் கேப்டன் பதவியிலிருந்து விலகியவரால், சிறப்பாக ஆடமுடியவில்லை. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கொஞ்சமும் உதவ முடியவில்லை. பெர்த்தில் தோல்வி. ஆஷஸ் தொடரையும் இழந்தாயிற்று. மெல்போர்ன் வந்தது இங்கிலாந்து அணி. 11 ஆண்டுகளாக குக் சதமடிக்க முடியாத மெல்போர்ன் மைதானத்துக்கு…
முதல் 3 போட்டிகளில் அவர் அடித்திருந்தது என்னவோ 83 ரன்கள்தான். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பும் 6 இன்னிங்ஸ்களில் ஒருமுறைதான் ஐம்பதைக் கடந்திருந்தது. அதனால், 327 என்ற முதல் இன்னிங்ஸ் ஸ்கோர், ஸ்மித்துக்கு குறைவாகத் தெரிந்திருக்காது. ஏனெனில், 3 போட்டிகளின் முதல் இன்னிங்ஸ்களில், அதிகபட்சமாக இங்கிலாந்து எடுத்த ஸ்கோர் 302 தான். ஒருமுறைகூட அவர்கள் முன்னிலை பெற்றதில்லை. இங்கிலாந்தின் இந்த மோசமான ஃபார்மும், குக்கின் தடுமாற்றமும் ஆஸி பௌலர்களுக்கு நம்பிக்கை தந்திருக்கும். ஆனால், குக்…
150 போட்டிகளில் ஆடியவர், தான் ஆடிய ஒவ்வொரு நாட்டிலும் சதம் அடித்தவர், எளிதில் சோடைபோய்விடுவாரா? அதுவும், ஆஸ்திரேலிய மண்ணில், மெல்போர்ன் அரங்கில் இன்னொரு டெஸ்ட் மேட்ச் ஆடிட முடியுமா? தெரியாது. இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். மைதானத்திலிருந்த 88,000 ரசிகர்களுக்கும் தன்னை நிரூபிக்கவேண்டும். நிரூபித்தார். இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்து பெவிலியன் திரும்பியபோது, மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்தபோது… அதுவரை பார்த்திடாத ஒன்றைப் பார்த்தார். பல கிரிக்கெட் ஜாம்பவான்களும் அரிதாக நினைக்கும் அந்த மைதானத்தில், அந்த ஸ்பெஷல் தருணத்தை உணர்ந்தார். மெல்போர்ன் மைதானத்தில் அலெஸ்டர் குக் சதம் அடித்துவிட்டார். அதுவும் இரட்டைச் சதம்!
இங்கிலாந்து – கிரிக்கெட்டின் பிறப்பிடம் என்ற பெயர் பெற்றதோடு சரி, இன்னும் உலகக்கோப்பை வெல்லவில்லை, பிராட்மேன், சச்சின், வார்னே போல மகத்தான ஜாம்பவான்கள் உருவாகவில்லை. உலகை ஆண்ட அரசியின் வாரிசுகளால், தாங்கள் தோற்றுவித்த விளையாட்டை ஆள முடியவில்லை. இயான் போத்தம், ஜெஃப்ரே பாய்காட், கிரகாம் கூச் என்று வெகுசிலரே ஜாம்பவான்களாகப் பார்க்கப்பட்டனர். அதன்பிறகு வந்த வீரர்களெல்லாம் பாராட்டப்பட்டார்களே தவிர, கொண்டாடப்படவில்லை! சாதனைகள் படைக்கக்கூடிய, முறியடிக்ககூடிய வீரர்கள் அரிதினும் அரிதாகவே இங்கிலாந்து அணியில் இருந்தனர்.
உதாரணமாக, 1995-ல் கிரகாம் கூச் ஓய்வுபெற்றபோது டெஸ்ட் போட்டிகளில் 8,900 ரன்கள் எடுத்திருந்தார். அந்தச் சமயம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து வீரர் அவர்தான். 2015 – அடுத்த 20 ஆண்டுகளில் எத்தனையோ வீரர்கள் கூச் அடித்த ரன் கணக்கை விஞ்சியிருந்தனர். 10 வீரர்கள் 10,000 ரன் மைல்கல்லை அடைந்திருந்தனர். கிரீம் ஸ்மித் மட்டும் கூச்சைத் தாண்டிவிட்டு 10,000 எடுக்காமல் ஓய்வு பெற்றிருந்தார். ஆக, அந்த 20 ஆண்டுகளில் 11 வீரர்கள் 9,000 ரன்களைக் கடந்திருந்தனர். ஆனால், அவர்களில் ஒருவர்கூட இங்கிலாந்து வீரர் இல்லை. கூச்சுக்கு அடுத்த இடத்திலிருந்த இங்கிலாந்து வீரர் – தேர்ந்த பேட்ஸ்மேனாக பெரிதும் அறியப்படாத விக்கெட் கீப்பர் அலெக் ஸ்டுவார்ட்.
அந்தச் சாதனையை ஒருவேளை, பீட்டர்சன் முறியடித்திருக்கக்கூடும். ஆனால், அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு எண்டு கார்டு போட்டு கொண்டாடியது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். அயர்லாந்து அணியில் ஆடியவர்களுக்கு, இங்கிலாந்து அணியில் இடம் கொடுப்பார்கள். ஆனால், போர்டை முறைத்துக்கொண்டால்…’கெட் அவுட்’ தான். அது யாராக இருந்தாலும் சரி. அந்த தேசமே சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடினாலும் சரி. சச்சின், தோனியாக இருந்தாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். நீ எப்பேற்பட்ட வீரனாக இருந்தாலும், பல சாதனைகளைச் செய்திருந்தாலும், ஒரு ஆஷஸ் தொடரில் சோபிக்கத் தவறினால் அடித்து வெளுப்பார்கள். ஒருவகையில் அவர்கள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் டீசன்ட் வெர்ஷன். பீட்டர்சன், கிரகாம் கூச்சை முறியடிக்காமல் போனதற்கு அதுவும் ஒரு காரணம்.
ஒருவழியாக, அந்த 20 ஆண்டு சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ‘England’s all time leading run scorer’ என்ற கௌரவத்தை தன்வசப்படுத்தினார் குக். வெறும் வீரர்களை உருவாக்கிய தேசத்தில் பிறந்த போராளி அவர். அதனால்தான் அத்தனை ஆண்டுகள், கேப்டனாக இருந்துகொண்டு, தொடக்க வீரராகவும் களமிறங்கிக்கொண்டு அவரால் சிறப்பாக செயல்பட முடிந்தது. டெஸ்ட் போட்டியில் முதல் இங்கிலாந்து வீரராக 10,000 ரன்களைக் கடக்க முடிந்தது. ஒரே போட்டியில் மகிளா ஜெயவர்தனே, சந்தர்பால், பிரையன் லாரா ஆகியோரைப் பின்னுக்குத்தள்ளி டெஸ்ட் கிரிக்கெட் ரன் ஸ்கோரர்கள் வரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேற முடிந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்துள்ளவர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில் இருப்பவர்கள் – சச்சின், பாண்டிங், காலிஸ், டிராவிட், சங்கக்காரா, குக், லாரா, சந்தர்பால், ஜெயவர்தனே, ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ். அவர்களுள் 9 பேர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். ஒரேயொரு ஓப்பனர் – அலெஸ்டர் குக்! பேட்டிங் செய்த 273 இன்னிங்ஸ்களில், 260 முறை ஓப்பனராகக் களமிறங்கியவர். ஓப்பனராகவே 11,000-க்கும் மேல் ரன் குவித்தவர்.
ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஒரு கோலத்தின் முதல் புள்ளியைப் போல! அந்த அணியின் இன்னிங்ஸ் பெரும்பாலும் அவர்களையே மையப்படுத்தியிருக்கும். டெஸ்ட் போட்டியின் முதல் நாள்… முதல் செஷன் – ஆட்டத்தின் போக்கை நிர்ணயிப்பது அந்த 30 ஓவர்கள்தான். ஓப்பனர்கள் எப்படி பௌலிங்கை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வர். ஓப்பனர்களுக்கு அப்படியில்லை. ஆடுகளம் ஸ்விங் ஆகிறதா, எவ்வளவு பௌன்ஸ் ஆகிறது, சுழலுக்கு ஒத்துழைக்கிறதா என்பதை அவர்கள்தான் அறிந்துகொள்ளவேண்டும். சில போட்டிகளில் ஜொலிக்க முடியும், சில போட்டிகளில் பௌலர்கள் வென்றுவிடுவார்கள்.
சேவாக், ஹெய்டன், லேங்கர், ஜெயசூர்யா போன்ற ஓப்பனர்கள், பல பெரிய இன்னிங்ஸ்கள் ஆடினாலும், ஒட்டுமொத்தமாக பெரிய ஸ்கோர் அடிக்க முடியாததன் காரணம் அதுதான். குக், ஆரம்பம் முதல் கடைசிவரை ஓப்பனராகவே ஆடினார். இன்னும் அப்படியே ஆடிக்கொண்டிருக்கிறார். முப்பதைத் தொட்டதும் சோர்ந்துவிடவில்லை. இந்த இரண்டு ஆண்டுகளிலும் சேர்த்து 2,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். அவ்வப்போது கொஞ்சம் தடுமாறுகிறார். ஆனால், இப்படியொரு அசத்தல் ஆட்டம், அவரை மீட்டுவிடுகிறது. சோர்ந்துபோன ஒரு பேட்ஸ்மேனால் மெல்போர்னில்…அதுவும் ஆஷஸ் தொடரில் இரட்டைச் சதம் அடித்திட முடியுமா என்ன..?