2017-ம் ஆண்டில் கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு விளையாட்டுகளிலும் இந்திய விளையாட்டு வீரர்கள் சாதித்துள்ளனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை நடத்தியது, ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டியை வென்றது, பேட்மின்டனில் பல பதக்கங்கள் வென்றது என அனைத்து விளையாட்டுகளிலும் இந்தியா அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பல இந்திய வீரர் – வீராங்கனைகள், சாதனைப் பட்டியலில் இணைந்துள்ளனர். அவர்களுள், இந்த ஆண்டின் டாப் 10 ஸ்போர்ட்ஸ் பெர்சனாலிட்டிகள் யார் யார்..? #Rewind2017
பி.கு: இவர்கள் டாப் 10 பிளேயர்கள் மட்டுமே. யாருக்கும் ரேங்க் தரப்படவில்லை.
பர்தீப் நார்வால்:
புரோ கபடி லீக்கின் சூப்பர் ஸ்டார்! 20 வயதுதான். ஆனால், அட்டகாச ஆட்டம். எதிர் அணியின் ஏரியாவுக்குள் இவர் புகுந்தாலே பாயின்ட் நிச்சயம். பாயின்ட் எடுப்பது அவரது ஸ்பெஷல் அல்ல, அதை எப்படி எடுக்கிறார் என்பதுதான் இவர் ஆட்டத்தின் சிறப்பு. ஆட்டத்தில் அவ்வளவு அழகு! ஒரு போட்டியில், ஒரே ரெய்டில் எட்டு பாயின்ட்கள் எடுத்து மெர்சல் காட்டினார். பாட்னே பைரேட்ஸ் அணிக்கு ஹாட்ரிக் கோப்பை வென்று தந்துள்ளார் இந்த ஹரியானா இளைஞர். 625 ரெய்ட் புள்ளிகள் பெற்று, புரோ கபடி லீக்கின் இரண்டாவது சிறந்த ரெய்டராகத் திகழ்கிறார். இவரது `டுப்கி’ மூவ், கபடி ரசிகர்கள் மத்தியில் ஹெலிகாப்டர் ஷாட் அளவுக்கு வரவேற்பு பெற்றுள்ளது. பாட்னா மட்டுமல்லாது, மற்ற அணியின் ஆதரவாளர்கள்கூட இவரது ஆட்டத்துக்கு ரசிகர்கள். இந்தியக் கபடி அணியின் எதிர்கால நம்பிக்கை பர்தீப்தான்!
விராட் கோலி:
சர்வதேச கிரிக்கெட்டில் இந்த ஆண்டு மட்டும் 2,818 ரன் குவித்துள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை ஃபைனல் வரை வழிநடத்தியவர், மற்ற அனைத்துத் தொடர்களையும் வென்றுள்ளார். தனிப்பட்ட முறையில் பேட்டிங்கில் உட்சபட்ச ஃபார்மையும் அடைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில், அடுத்தடுத்த போட்டிகளில் டபுள் செஞ்சுரி, ஒருநாள் போட்டிகளில் 6 சதம் என, அவரது டீலிங் எல்லாம் சதத்தில்தான். ஐ.பி.எல், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் போன்றவற்றில் எதிர்பார்த்த அளவுக்குச் சோபிக்கவில்லை என்றாலும், அதன் பிறகான தொடர்களில் விஸ்வரூபம் காட்டினார் விராட். மூன்று ஃபார்மட்களிலும் சேர்ந்து 10 அரைசதங்களும், 11 சதங்களும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையை கோலிதான் ஆள்கிறார். ஒருநாள் தரவரிசையில் 3-வது இடம், டெஸ்டில் 2-வது இடம், டி-20யில் 3-வது இடம் எனப் பட்டையைக் கிளப்புகிறார் கிங் கோலி.
பி.வி.சிந்து:
மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, பலரும் பிரேக் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், சிந்து இன்னும் வேகத்துடனும் வெற்றி வேட்கையுடனும் ஓடிக்கொண்டிருக்கிறார். 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு, இந்த ஆண்டும் தன் அசத்தல் ஃபார்மைத் தொடர்ந்தார் சிந்து. அந்த ஃபைனலில், தன்னை வீழ்த்திய ஸ்பெய்னின் கரோலினா மரினை வீழ்த்தி, இந்தியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பட்டம் வென்றார். உலக சாம்பியன்ஷிப் ஃபைனலில் தன்னைத் தோற்கடித்த, நசோமி ஒகுஹாராவை கொரியன் ஓப்பனில் வீழ்த்தினார். இந்த ஆண்டு மட்டும் ஆறு தொடர்களின் ஃபைனலுக்கு முன்னேறிய சிந்து, மூன்று பட்டங்களை வென்றுள்ளார். அதுமட்டுமன்றி, ஆண்டின் தொடக்கத்தில் நடந்த, ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடரில், சென்னை ஸ்மேஷர்ஸ் அணியை வழிநடத்தி கோப்பையும் வென்றார்.
விஜேந்தர் சிங்:
தொழில்முறை குத்துச்சண்டைக்குள் அடியெடுத்துவைத்த விஜேந்தர் சிங், வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறார். இதுவரை தான் ஆடியுள்ள 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொழில்முறை குத்துச்சண்டை அரங்கில் மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, WBO ஆசியா – பசிபிக் சூப்பர் மிடில் வெயிட் பட்டம் வென்றிருந்தார். இந்த ஆகஸ்ட் மாதம் சீனாவின் ஜுல்ஃபிகர் மைமைதியாலியுடன் மோதி வெற்றி பெற்ற விஜேந்தர், WBO உலக சூப்பர் மிடில் வெயிட் பட்டத்தையும் வென்றார். கடந்த வாரம், கானாவின் எர்னஸ்ட் அமுழுவை வீழ்த்தி, தன் வெற்றிப் பயணத்தைத் தொடர்கிறார் இந்த ஹரியானா வீரர்.
ரோஹித் ஷர்மா:
இந்த ஆண்டும் ஹிட்மேனின் சாகசங்கள் தொடர்ந்தன. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்றாவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றார் ரோஹித். அடுத்து இந்திய `லிமிடெட் ஓவர்ஸ்’ அணிக்கு துணை கேப்டன் ஆனவர், ஆண்டு இறுதியில் கேப்டன் ஆகி, இலங்கையை ஒயிட் வாஷும் செய்துவிட்டார். கேப்டன் ரோஹித்தைவிட, பேட்ஸ்மேன் ரோஹித் ஒருபடி மேல். டெஸ்டில் ஆடிய மூன்று இன்னிங்ஸில் 1 சதம், 2 அரைசதம் அடித்து சிறப்பான கம்பேக் கொடுத்தார். டி-20 போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து, அதிவேக சதம் அடித்தவர் வரிசையில் மில்லருடன் முதல் இடத்தைப் பகிர்ந்துகொண்டார். அனைத்துக்கும் மேலாக, ஒரு நாள் போட்டிகளில் மூன்றாவது டபுள் செஞ்சுரி அடித்து கிரிக்கெட் உலகையே மிரளவைத்துள்ளார். ஐ.சி.சி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் ரோஹித்.
அதிதி அசோக்:
இந்தியர்கள் பெரிய அளவில் சாதிக்காத கோல்ஃப் அரங்கில், பட்டையைக்கிளப்பிக்கொண்டிருக்கிறார் 19 வயது அதிதி. ரியோ ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்றதே மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டது. அதில் சிறப்பாகச் செயல்பட்டு கவனம் ஈர்த்தார். இந்த ஆண்டு, இன்னும் உத்வேகத்துடன் விளையாடி வெற்றிகளைக் குவித்தார் அதிதி. நவம்பர் மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஃபாத்திமா பின்ட் முபாரக் பெண்கள் ஓப்பன் தொடரை வென்று அசத்தினார். அது, அவர் வென்ற மூன்றாவது `லேடீஸ் யூரோப்பியன் டூர்’ (LET) பட்டம். Ladies Professional Golf Association (LPGA) தொடர் ஒன்றுக்குத் தேர்வான முதல் இந்தியர் இவர்தான். இதுமட்டுமன்றி, இந்த ஆண்டு பல முன்னணி தொடர்களிலும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
கிடாம்பி ஸ்ரீகாந்த்:
2017-ம் ஆண்டில் மட்டும் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ், டென்மார்க் ஓப்பன் சூப்பர் சீரிஸ், பிரெஞ்சு ஓப்பன் தொடர் என நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்றுள்ளார் ஸ்ரீகாந்த். பேட்மின்டன் வரலாற்றிலேயே ஆண்கள் பிரிவில், ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் தொடர்களை வென்ற நான்காவது வீரர் இவர்தான். அதுமட்டுமன்றி, ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற முதல் இந்தியரும் இவர்தான். ஓராண்டில் மூன்று பதக்கங்கள் வென்று இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்த சாய்னாவை, இவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். டென்மார்க் ஓப்பன் காலிறுதியில் நம்பர் 1 வீரர் விக்டர் ஏக்சல்ஷனை வீழ்த்தியது இந்த ஆண்டின் `பெஸ்ட் மொமன்ட்’. சர்வதேச பேட்மின்டன் தரவரிசையில் 2-வது இடம் வரை முன்னேறிய ஸ்ரீகாந்த், இப்போது 4-வது இடத்தில் உள்ளார்.
மிதாலி ராஜ்:
பி.பி.சி-யின் 2017-ம் ஆண்டுக்கான 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதே போதும் மிதாலியின் பெருமை சொல்ல. மொத்த தேசமும் `விராட் அண்ட் கோ’ மீது மட்டும் கவனம் செலுத்த, பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை முன்னேறி ஆச்சர்யம் தந்தது மிதாலி அண்ட் கோ. கிட்டத்தட்ட கோப்பையை வென்றிருந்தனர். கடைசிகட்டத்தில் நடந்த சில சொதப்பல்களால், இங்கிலாந்திடம் பதக்கத்தை இழந்தது. அதுமட்டுமன்றி, `பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக 6,000 ரன்னைக் கடந்தவர்’ என்ற பெருமையையும் அடைந்தார் மிதாலி. மேலும், பெண்கள் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் அரைசதம் அடித்தவரும் இவர்தான். அந்தப் பெருமையையும் இந்த ஆண்டு தன்வசப்படுத்தினார் மிதாலி. இந்தச் சாதனைகள், இப்போது அவருக்கு விளம்பர வாய்ப்புகளையும் விருதுகளையும் குவித்துக்கொண்டிருக்கின்றன.