கேப்பாபிலவில் மக்களுக்குச் சொந்தமான 111ஏக் ர் காணியை விடுவிப்பதற்காக 148 மில்லியன் ரூபாவை இராணுவத்துக்கு வழங்குவது தொடர்பில் அமைச்ச ரவையில் நாளை ஆராயப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், மறுவாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்டது.
நாளை செவ்வாய்க்கிழமை கூடும் அமைச்சரவையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். கேப்பாப்பிலவில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்காக ஏற்கனவே 5மில்லியன் ரூபாவை மீள்குடியேற்ற அமைச்சு ஒதுக்கியது. ஜூலை 19ஆம் திகதி விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட 189 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதற்காக இந்தப் பணம் வழங்கப்பட்டது.
இருப்பினும் இராணுவம் அன்றைய தினம் விடுவித்த காணிகளில் தமக்குரிய குடிமனைக் காணிகள் ஏதும் இல்லை என்று மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் காணி கையளிப்பு நிகழ்வு கைவிடப்பட்டது.
இதனையடுத்து மக்களின் காணிகளை விடுவிப்பதனால் தமக்கு மேலும் பணம் வேண்டும் என்று இராணுவம் கோரியது. அமைச்சில் நடந்த கலந்துரையாடலில் இது தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்தே 148 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரிம் முன்வைக்கப்பட்டது.
தமது சொந்தக் காணிகளை விடுவிக்குமாறு கேட்டு கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக 166 நாள்களாகத் தொடர்ந்து வீதியோரம் அமர்ந்திருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த காணிகளை விடுவிக்க அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன அவர் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அடுத்தடுத்து இரண்டு கடிதங்களை அனுப்பியிருக்கிறார்.