கூட்டாட்சியைக் காக்க சந்திரிகா களத்தில்! – 2019வரை ஒப்பந்தத்தை நீடிக்குமாறு சு.கவின் மத்திய குழுவுக்கு ஆலோசனை
கூட்டரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை 2019ஆம் ஆண்டுவரை நீடிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார் எனத் தெரியவருகின்றது.
சு.கவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்குமிடையே செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை நாளைமறுதினம் 31ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையிலேயே சந்திரிகா மேற்படி யோசனையை முன்வைத்துள்ளார்.
இதற்கமையவே மேற்படி ஒப்பந்தம் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் ஆராய்வதற்கு சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்றும், 2020 வரை கூட்டாட்சியை தொடர்வதற்கே சு.கவிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் விரும்புகின்றனர் என்றும் அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டரசுக்குள்ளிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அது பொது எதிரணிக்கு வாய்ப்பாக அமைந்துவிடுமெனவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார். மறுபுறத்தில் அரசியிலிருந்து வெளியேறவேண்டுமென சில உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். இதனால், சுதந்திரக் கட்சியின் தலைமை திரிசங்கு நிலையில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.