தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் சமீப காலமாக எழுந்துள்ள பிரச்சினைகள் களையப்பட்டு, அதனை மீளக்கட்டியெழுப்பவேண்டியது அதன் பங்காளி கட்சிகளின் பொறுப்பாகுமென திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட சிவில் சமூகம் சார்பில் இன்று (வியாழக்கிழமை) திருகோணமலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சிவில் சமூக பிரதிநிதியான வ.தர்மபவன் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்ற கட்சியாக நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இன்றைய சூழலில் அதன் பங்காளிக்கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள உள்ளக சூழ்நிலைகள் கவலையளிப்பதாக உள்ளது. இன்றைய சூழலில் மக்களுக்கு ஒரு குழப்பகரமான சூழலையும் கட்சி ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு, கூட்டமைப்பானது இன்றைய கால சூழலில் தம்மை முறையாக புனரமைத்து மீளக் கட்டியமைத்துக்கொள்ள வேண்டும். இதற்கான பொறுப்பு பங்காளிக்கட்சிகளின் தலைவர்களையே சாரும். இது தமிழ் மக்களின் சூழல் மற்றும் காலத்தின் கட்டாயமாகும். கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளாக செயற்படும் கட்சிகளின் தலைமைகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டும்.
பங்காளிக் கட்சிகளுக்கிடையில் சம அந்தஸ்துள்ள நிலமையை தோற்றுவிக்கும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கான எழுத்து வடிவிலான உடன்பாடுகள் எட்டப்பட வேண்டும்.
அதே நேரத்தில் இக்கட்சியினுடைய சின்னம் ஒரு பொது சின்னமாக தெரிவுசெய்யப்படலாம். இதுவும் சில சந்தர்பங்களில் கட்சிகளுக்கிடையில் ஏற்படும் பிளவுகளுக்கு காரணமாக அமையலாம்” என்றார்.