அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வடகொரியா சம்மதம் தெரிவித்துள்ளது.
தொடக்க விழாவின்போது தென்கொரியா, வடகொரியா விளையாட்டு வீரர்கள் ஒரே கொடியின் கீழ் மைதானத்தில் அணிவகுத்துச் செல்ல வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் தென்கொரியா, வடகொரியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் இடம்பெறும் ஒரே பனிச்சறுக்கு ஹாக்கி விளையாட்டு அணியை உருவாக்கவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறியபோது, ”அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளால் உலகில் வடகொரியா தனிமரமாகி உள்ளது. தற்போதைய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்பதன் மூலம் உலகோடு ஒன்றி வாழ்வதற்கான சூழலை அந்த நாடு பெறுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது” என்று தெரிவித்தார்.