முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் ஓட்டுநர் கனகராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவின் கார் டிரைவர் ஆகியோர் அடுத்தடுத்து பலியாகியுள்ளதால் விஐபிக்களின் கார் டிரைவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டவர் ஜெயலலிதாவிற்கு கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ்.
ஜெயலலிதா இறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை ஏப்ரல் 24ம் திகதி நடைபெற்றது.
இதில் முக்கிய குற்றவாளியாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் தேடப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சேலம் ஆத்தூர் பகுதியில் கனகராஜ் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால், இதனை மறுத்த பொலிசார் சாலை விபத்தில் கனகராஜ் மரணம் அடைந்தாக தகவல் வெளியிட்டது.
ஆனால் சேலம் ஆத்தூரில் சாலை விபத்து நடந்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லை என குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தகவல் வெளியிட்டன. எந்த வாகனத்துடன் மோதி விபத்து நடந்தது என்ற விவரங்களையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை. இதனால் இவரது மரணத்தில் மர்மம் அதிகரித்துள்ளது.
இது கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலையில் மேலும் அதிக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று, இன்று ஜெயலலிதாவால் தலைமைச் செயலாளர் பதவி வழங்கப்பட்ட ராமமோகன் ராவின் கார் ஓட்டுநர் பலியாகியுள்ளார். ஓட்டுநர் ரவிசந்திரன், தாம்பரம் அருகில் நடைபெற்ற விபத்தில் பலியாகியுள்ளார்.
ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் கார் ஓட்டுநர் என வரிசையாக முக்கியமானவர்களின் கார் டிரைவர்கள் திடீர் திடீரென மர்ம மரணம் அடைந்து வருவதால் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், விஐபிக்கள், அமைச்சர்கள், முக்கிய செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகளிடம் கார் ஓட்டும் டிரைவர்கள் பீதி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.