எதிர்வரும் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து ஆட்சி அமைக்க வேண்டும். அல்லது பொருத்தமான கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஐயன்கேனி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கடந்த மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியில் பங்காளியாக இணைந்திருந்தது. இதன் காரணமாக தமிழ் மக்களிடமிருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டதுடன், தொடர்ந்தும் விமர்சனங்கள் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட வேண்டிய பாரிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உள்ளது.
எமது மக்களின் எதிர்பார்ப்பு கடந்த ஆட்சியில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்து பார்க்கும் போது எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து அல்லது அதன் தலைமயில் ஆட்சி அமைக்க வேண்டுமே தவிர மற்றுமோர் கட்சியின் தமைமையின் கீழ் ஆட்சியில் இணைவது பற்றி சிந்திக்க கூடாது. கடந்த தேர்தலின் போது 11 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. 15 ஆசனங்களை பெற்றிருந்தாலும் ஆட்சியை தனித்தோ அல்லது ஏனைய கட்சிகளை இணைத்தோ அமைத்திருக்க முடியாது.
காரணம் தேசிய கட்சிகளின் தலைவர்களை பொறுத்தவரை மத்தியில் யார் அதிகாரம் பெற்றிருந்தாலும் கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்யக் கூடாது என்ற ஒருமித்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள். இந்த அரசாங்கம் நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டு ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
பதவிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்தும் நடைபெற வேண்டிய தேர்தல்களை நடத்தாமல் இழுத்தடிப்பு செய்கின்றது என்றது எனவும் தெரிவித்துள்ளார். 1987ஆம் ஆண்டு மாகாண சபை முறை கொண்டு வரப்பட்டது.
இதுவரை காலமான 30 வருடங்களில் சுமார் 10 வருடங்கள் தான் எமது மாகாணத்தில் மக்கள் ஆட்சி இடம்பெற்றுள்ளது. இதேவேளை, சுமார் 20 வருடங்கள் ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் இருந்துள்ளது. மீண்டும் எமது மாகாணம் ஆளுநரின் அதிகாரத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நல்லாட்சி என்று கூறும் ஆட்சிக்கு பொருத்தமானதாக தெரியவில்லை என்றும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.