வடக்கில் விடுதலைப் புலிகளின் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி கடுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் இராணுவத்தின் தலைமையில் பல விடயங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் முன்பள்ளிகள் கூட இராணுவத்தினரால் நடத்தப்படுகின்றன.
சாதாரணமாக முன்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு மாதாந்தம் 4 ஆயிரம் ரூபா முதல் 6 ஆயிரம் ரூபா வரை சம்பளம் வழங்கப்படும்.
மேலும் கற்பித்தலுக்கு தேவையான கல்வி தகுதிகளை கொண்டிருக்கும் முன்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு சுமார் 15 ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்படலாம்.
எனினும் கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நடத்தப்படும் முன்பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு 32 ஆயிரம் ரூபா சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஏனைய முன்பள்ளி ஆசிரியைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படும் நிலையில், இராணுவம் நடத்தும் முன்பள்ளிகளில் பயிற்றுவிக்கும் ஆசிரியைகளுக்கு அதிகளவில் சம்பளம் வழங்கப்படுவதானது இராணுவயமாக்கலின் ஒரு பகுதி என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஆசிரியைகளுக்கு பயிற்சி பாடநெறிகள், மாணவர்களுக்கான வினோத சுற்றுலாப் பயணங்கள், கல்வி சுற்றுலாக்கள் என்பவற்றையும் இராணுவமே ஏற்பாடு செய்து வருகிறது.
கிளிநொச்சி இராணுவ தலைமையகம் இதற்கு முன்னர் ஒரு முறை வடக்கு, கிழக்கு உள்ளடங்கும் வகையில் முன்பள்ளி மாணவர்களுக்கு இரண்டு நாள் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்திருந்தாக இராணுவத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இராணுவம் நடத்தும் முன்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தாம் இராணுவத்திற்குரியவர்கள் என்பதை காட்டும் வகையிலான சில எழுத்துக்களுடன் தைக்கப்பட்ட சீருடைகளை அணிய வேண்டும் என்பது மிகவும் ஆபத்தான விடயம் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் மூலம் ஒன்று இரண்டு தெரியாத சிறுவர்கள் கூட இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.