ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது. 151 பேர் படுகாயமயமடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதிகரிக்கும் அபாயம்
காபூலில் பல நாட்டுதூதரக அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி அருகே பயங்கரவாதிகள் ஆம்புலன்சில் மறைந்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் 95 பேர் உயிரிழந்தனர். 151 பேர் படு காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொறுப்பேற்பு
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று கொண்டனர். கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாதிகள் நடத்தும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்தியா உதவ தயார்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.