காணி விடுவிப்பு! காணாமல் போனோருக்கு தீர்வு! இலங்கையை வலியுறுத்திய சர்வதேச நாடுகள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நேற்றைய அமர்வில் இலங்கை தொடர்பிலான விவாதம் நடைபெற்ற, நிலையில் அதில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைத்து சர்வதேச நாடுகளினதும் பிரதிநிதிகளும் சர்வதேச பங்களிப்புடனான விசாரணை பொறிமுறையை வலியுறுத்தியதுடன் காணி விடுவிப்பு காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு, பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான கால அட்டவணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் என்பவற்றை மிகவும் வலுவான முறையில் வலியுறுத்தினர்.
அத்துடன் கடந்த 18 மாதகாலத்தில் இலங்கை அரசாங்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட சர்வதேச நாடுகள் நல்லிணக்கத்திலும் பொறுப்பு கூறலிலும் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்பதையும் வலியுறுத்தினர்.
இலங்கை தொடர்பிலான இந்த விவாதம் ஜெனீவா நேரப்படி மாலை 3 மணியளவில் ஆரம்பமாகியது. முதலில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பிலான அறிக்கையை வெளியிட்டு உரையாற்றினார். தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றினர்.
அமெரிக்கா
விவாதத்தில் அமெரிக்காவின் ஜெனீவா பிரதிநிதி உரையாற்றுகையில்,அரசாங்கம் ஐ.நா.வுடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றமை வரவேற்கத்தக்கது. எனினும் பொறுப்புகூறல் விடயத்தில் தொடர்ந்தும் சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
ஜனாதிபதி பிரதமர் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்க முயற்சி செய்கின்றமை பாரட்டத்தக்கது. கடந்த 18 மாத காலத்தில் அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றே தோன்றுகிறது.
வடக்கு கிழக்கில் பொது மக்களின் 45 ஆயிரம் ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளன. அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும். காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வு அவசியம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும். பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் கால அட்டவணை அவசியம். என்றார்.
பிரிட்டன்
பிரிட்டனின் பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றுகையில்,அரசாங்கம் விரைவாக காணாமல் போனோர் விவகாரத்திற்கு காணி விடுவிப்பு விவகாரத்திற்கும் தீர்வு காண வேண்டும் நட்டயீடு வழங்கும் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.
2015ம் ஆண்டு பிரேரணையை அமுல்படுத்துவதில் கட்டமைப்பு திட்டமும் கால அட்டவணையும் முன்னெடுக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு தொடர்ந்து உதவிகளை வழங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.
நியூசிலாந்து
நியூசிலாந்து பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றுகையில்,இலங்கை தொடர்பிலான ஐ.நா .மனித உரிமையாளர் ஆணையாளரின் அறிக்கையை நாங்கள் வரவேற்கின்றோம். இலங்கையின் நீதி நிலைநாட்டப்பட்டு மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
அத்துடன் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருடம் கால அவகாசம் வழங்குவதை நாங்கள் வரவேற்கின்றோம் என்றார்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றுகையில்,நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. ஜனநாயக செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது.
காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. இந்த விடயத்தில் தேசிய வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சிறுபான்மை மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஜப்பான்
ஜப்பான் பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றுகையில்,இலங்கையின் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி கண்ணிவெடியகற்றல் போன்றவற்றில் ஜப்பான் அரசாங்கம் உதவி வழங்கும். மேலும் இலங்கைக்கு ஒரு விசேட வழக்கறிஞரை ஜப்பான் அனுப்பி நல்லிணக்கத்திற்கு ஒத்துழைப்பு செயற்பாட்டிற்கு உதவி வழங்க தயாராக இருக்கின்றது.
உண்மையான நல்லிணக்கத்தை அடைந்து கொள்ள இலங்கையை அனைத்து பிரஜைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டம் அவசியம். அந்தவகையில் இலங்கை தொடர்பிலான .பிரேரணைக்கு ஜப்பான் இணை அனுசரனை வழங்கும் என்றார்.
டென்மார்க்
டென்மார் பிரதிநிதி விவாதத்தில் உரையாற்றுகையில்,டென்மார்க் அரசாங்கம் இலங்கை தொடர்பிலான ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கின்றது. அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பிலும் மனித உரிமை விவகாரத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை டென்மார் அங்கீகரிக்கின்றது.
2015 ஆம் ஆண்டு பிரேரணை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவேண்டும். இராணுவம் கையகப்படுத்த்தியுள்ள மக்களின் காணிகள் மீள் வழங்கப்படவேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் மனித உரிமையை முன்னேற்றவேண்டும். பிரேரணையை அமுல்படுத்துவதில் கால அட்டவணையையும் விரிவான திட்டமும் அவசியம் என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி இலங்கை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில்,ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கைத் தொடர்பான அறிக்கையை வரவேற்கின்றோம்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அதனூடாக அரசியல் தீர்வை முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முயற்சியை வரவேற்கின்றோம்.
நீதிவிசாரணை பொறிமுறையானது நம்பகரமானதும் பாதிக்கப்பட்ட மக்களை மையமாக கொண்டதாகவும், சர்வதேச ஆதரவுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் மக்களின் வாழ்க்கை இயல்பாக்கப்பட வேண்டும். இராணுவ பிரசன்னத்தின் அளவை குறைக்க வேண்டும். 2017ம் ஆண்டு பிரோணையை முழுமையாக அமுல்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு வழங்கும் என்றார்.
அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவின் ஜெனீவாவுக்கான பிரதிநிதி உரையாற்றுகையில்ஐ.நாவுடன் இலங்கை இணைந்து செயற்படுவதை அவுஸ்திரேலியா பாராட்டுகிறது. அரசியலமைப்பு மறுசீறமைப்பு, காணி விடுவிப்பு, சிவில் சமூக செயற்பாட்டுக்கான இடம் என்பவற்றை நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.
நல்லிணக்க செயலணியின் அறிக்கையை வரவேற்பதோடு அரசாங்கத்தின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். நீதிவிசாரணை பொறிமுறையை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிகின்றது.
காணாமல்போனோர் அலுவலகம் விரைவில் இயங்கும் என எதிர்பார்க்கின்றோம். பொறுப்பு கூறல் பொறிமுறையில் முன்னேற்றத்தை எதிர்பார்க்கின்றோம். பயங்கரவாத தடைச்சடத்திற்கு பதிலான புதிய சட்டம் சர்வதேச தரத்திற்கு அமையவேண்டும்.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாட்டில் ஆஸி. அயல்நாட்டு நண்பனாக சிறந்த பங்காளனாக இருக்கும் என்றார்.
கனடா
கனடாவின் ஜெனீவா பிரதிநிதி உரையாற்றுகையில்இலங்கை தொடர்பான செய்ட் அல் ஹுசைனின் அறிக்கையை வரவேற்கின்றோம். காணமல் போனோரின் அலுவலகத்தை நியமித்தல், ஜனநாயம் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு, கருத்து சுதந்திரத்தில் முன்னேற்றம் போன்றவற்றில் முன்னேற்றத்தைப் பார்க்கின்றோம்.
எனினும் இன்னும் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. இலங்கையில் சட்ட நிறுவனங்கள் வலுப்படுத்தப் பட வேண்டும்.
எனவே இலங்கை 2015ம் ஆண்டு பிரேரணையை அமுல்படுத்துவது தொடர்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கால அட்டவணை முன்னெடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.
புதிய இலங்கை தொடர்பான பிரேரனைக்கும் கனடா ஆதரவு வழங்குகின்றது. நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் சிறப்பாக செயற்படுமாறு இலங்கையை வலியுறுத்துகிறோம்.
ஜெர்மனி
ஜெர்மனி ஜெனீவா பிரதிநிதி உரையாற்றுகையில்2015ம் பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் இலங்கை முன்னெடுத்துள்ள முன்னேற்றங்களை ஜெர்மனி வரவேற்கின்றது. அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாடானது இலங்கை சிறந்த முறையிலா ஒரு அரசியல் தீர்வை அடைவதற்கு சந்தர்ப்பத்தை கொடுத்துள்ளது.
காணாமல் போனோர் அலுவலம் குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை நிறுவுவதில் இன்னும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியுள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாட்டில் இலங்கை இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கின்றது.
அரசாங்கம் இராணுவத்திடமுள்ள தனியார் காணிகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுத்தால், சிவில் செயற்பாடுகளினாலான இராணுவத்தின் ஈடுபாட்டை குறைத்தால் நல்லிணக்க பயணத்திற்கு சிறப்பாக அமையும்.
உண்மை கண்டறிதல், நீதியை நிலைநாட்டுதல், நட்டஈடு வழங்குதல், மீள் நிகழமையை உறுதிப்படுத்துதல் என்பன முக்கியமானதாகும். அனைத்து தரப்பிலும் பாதிக்கப்பட்டோர் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.