படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிப்பதற்கும், விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஒரு வருடத்திற்கு முன்னரே உத்தரவிட்டிருந்த போதிலும் இதுவரையிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதை மனவருத்தத்துடன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்து பேசிய போது ஜனாதிபதி இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின் போது குறித்த விடயம் தொடர்பில் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகின்றீர்கள் என ஜனாதிபதியிடம் கேட்ட போது, விரைவில் இது குறித்து படைத் தளபதிகளுடன் பேசவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்ததாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் நாளைய தினம் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ள நிலையில், அதன் முன்னோடியாகவே ஜனாதிபதியை சந்தித்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், வெசாக் தினத்தில் பொது மன்னிப்பு வழங்குமாறு அரசியல் கைதிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும், இது தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.