காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் இடம்பெயர்வு
அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் தென்பகுதியில் அதிகரித்துவரும் காட்டுத்தீயின் விளைவாக சுமார் 82 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.
கலிபோர்னியாவின் தென்பகுதியில் உள்ள மலையோர காட்டுப் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ பரவி 9 ஆயிரம் ஏக்கர் நிலம் முற்றாக சேதமடைந்துள்ளதோடு,இதுதவிர சுமார் 3 இலட்சம் ஏக்கர் நிலம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் 700 இற்கும் அதிகமான தீயணைப்புப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும்,அதிக காற்று காரணமாக வேகமாக பரவிவரும் இந்த தீயினால், லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்து சுமார் 120 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள ரைட்வுட் குடியிருப்பு பகுதியில் உள்ள பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
இதன்விளைவாக, அப்பகுதியில் வசித்துவந்த சுமார் 82 ஆயிரம் பேர் தங்களது வசிப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வடக்கு கலிபோர்னியாவின் ஒருசில பகுதிகளிலும் காட்டுத்தீ மிகவேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,மத்திய கலிபோர்னியாவில் சில பகுதிகளுக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.