கவுண்டமணியை வைத்து ‘வாய்மை’ என்ற படத்தை இயக்கிய செந்தில்குமார், அடுத்து விஜய் ஆண்டனியை வைத்து ‘காக்கி’ என்ற படத்தை இயக்குகிறார். மீண்டும் இப்படத்தில் காக்கி உடை அணிந்து போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி.
அது மட்டுமல்ல, இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி முதன் முதலாக சிக்ஸ் பேக் அவதாரம் எடுத்து நடிக்கிறார். அதிரடி, ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் இன்னொரு ஹீரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், ஈஸ்வ்ரி ராவ், யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கான கதாநாயகிகள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ‘வாய்மை’ படத்திற்கு இசை அமைத்த அகத் இசை அமைக்கிறார்.
சுமார் 10 வருடங்களுக்கு முன் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் ‘காக்கி’ என்ற படம் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய பர்ஸ்ட்காப்பி ரெடியான நிலையில் காக்கி படத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்.
இதெல்லாம் தெரியுமோ என்னவோ.. தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் படத்துக்கு காக்கி என்று பெயர் வைத்துள்ளனர். படம் வெளியாகும்போது பழைய காக்கி படத்தின் தயாரிப்பாளர் கோர்ட்டுக்குப் போனால் விஜய் ஆண்டனியின் காக்கி படத்துக்கு சிக்கல் வர வாய்ப்புள்ளது.
அதனாலோ என்னவோ காக்கி படத்தின் பூஜை விளம்பரத்தில் காக்கி என்ற எழுத்துக்கு பக்கத்தில் சிறியதாக டா என்று போட்டுள்ளனர். அதாவது காக்கிடா என்பதுதான் படத்தின் பெயராம்.