இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய வீரராக விளங்குபவர் புஜாரா. அண்மையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 சதம் உள்பட 309 ரன் விளாசினார்.
29 வயதான புஜாரா கவுன்டி கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வருகிறார். கவுன்டி கிரிக்கெட்டில் ஆடுவது ஒரு கிரிக்கெட் வீராக என்னை உயர்த்திக்கொள்ள உதவுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி: 2015ம் ஆண்டு இலங்கை அணியுடன் சிறப்பாக ஆடியது நிறைய நம்பிக்கை அளித்தது.
அதனால் இந்த முறை ரன் குவிக்க உதவியாக இருந்தது. ஒரு கிரிக்கெட் வீரராக வளர உயர்வதற்கு கவுன்டி கிரிக்கெட் உதவுவதாக நம்புகிறேன் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட வேண்டுமென்றால் அனைத்து மைதானங்களிலும் ரன் குவிக்க வேண்டும். அந்த வகையில் கவுன்டி கிரிக்கெட் புதிய அனுபவம் அளிக்கிறது, வாய்ப்பு கிடைக்கும் போது எந்த ஒரு வீரரும் கவுன்டி போட்டிகளில் ஆட வேண்டும்.
இந்திய அணி ஒரு குழுவாக ஆடுவதால் தான் தொடர் வெற்றி பெற முடிகிறது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆடும் பட்சத்தில் 400 ரன்கள் குவிக்க முடியும். அதே நேரத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுத்தால் 600 ரன்களுக்கும் மேல் எடுக்க முடியும்.
இந்திய அணியில் இடம் பிடிக்க கடும்போட்டி நிலவுகிறது. ஆடும் லெவனில் இடம் பிடிப்பவர்கள் தங்கள் பங்களிப்பை செய்கின்றனர்.
உமேஷ், ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர், என்றார். இந்திய அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகளில் ஆடி உள்ள புஜாரா 3 இரட்டை சதம், 13 சதம் மற்றும் 15 அரை சதத்துடன் 4107 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.