தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள சிலர் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகமான ஆதரவினை வழங்கிவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
தமது பிள்ளைகளை வழிநடத்த தெரியாத கமலதாஸ் போன்றவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் கதைப்பதற்கு அருகதையற்றவர்.
இந்த கமலதாஸ் கடந்த காலத்தில் முஸ்லிம்கள் சிலருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகளை உடைப்பதற்காக சுயேட்சை கட்சிகளுக்கூடாக தேர்தலில் நின்றவர்தான்.
இன்று கருணா அம்மானுடன் இணைந்து கட்சி ஆரம்பித்துள்ளார். பணத்திற்காக எதனைவேண்டுமானாலும் செய்யக்கூடியவர்.
அவருக்கு தமிழர்கள் தொடர்பான அக்கறை என்பது இல்லை. பணத்திற்காகவே அவர் இவ்வாறு செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பில் 200க்கும் மேற்பட்ட மட்டக்களப்பின் யுவதிகளின் நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பில் தமிழர் ஐக்கிய சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் கமலதாசின் மகன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அது தொடர்பிலான விபரங்களை ஊடகவியலாளர்கள் வெளிக்கொணர்ந்திருக்க வேண்டும். அன்று அதனை செய்திருந்தால் இன்று ஊடகவியலாளர்களுக்கு எதிராக அவர் கதைக்கும் நிலையேற்பட்டிருக்காது.
குறித்த கமலதாசின் மகனின் அந்த நடவடிக்கைகள் மறைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
அது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளேன். இங்கு அது தொடர்பிலான விசாரணைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படவில்லை.
பொலிஸார் அதனை மூடிமறைக்க முற்பட்டுள்ளனர். கல்குடா சுற்றலா பகுதியாகும். அங்கு சுற்றுலா தொடர்பான பல்வேறு விடுதிகள் அமைக்கப்படுகின்றன.
குறித்த மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் போது மதுசார உற்பத்தி நிலையம் தான் அமைக்கப்படுகின்றது என்பது யாருக்கும் தெரியாது.
ஆனால் அது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றது தொடக்கம் நான் நடவடிக்கையெடுத்து வருகின்றேன்.
குறித்த மதுபானசாலையினை அமைப்பதற்கான அனுமதியை பிரதேசசபை வழங்கவில்லை. குறித்த மதுபானசாலை தொடர்பிலான தகவல்களை வெளிக்கொணர்ந்து அதனை நிறுத்தவேண்டும் என்று நான் பிரதேச அபிவிருத்திக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றினேன்.
இன்று கமதாஸ் கூறுகின்றார் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லையென்று. பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பே கொண்டுவந்து நிறைவேற்றியுள்ளது.
இந்த மதுசார உற்பத்தி நிலையத்திற்கு சில தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பதை கமலதாஸ் கவனிக்க மறந்துவிட்டார்போல் இருக்கின்றது.
கல்குடா மதுசார உற்பத்தி நிலையம் என்பது மட்டக்களப்புக்கு மிகவும் பாதிப்பினை ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன்.
அண்மையில் புத்திஜீவிகள் சிலரும் அரசியல்வாதிகளும் இணைந்து குறித்த மதுசார உற்பத்திசெய்யும் நிலையம் ஊடாக நன்மை கிடைக்கும் என்று சொல்லிவருகின்றனர்.
நான் அப்பகுதியை சேர்ந்தவன். அதன் பாதிப்புகள் தொடர்பில் அறிந்தவன் என்ற வகையில் நான் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றேன்.
இன்று அந்த மதுசார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்புகள் வரக்கூடாது என்பதற்காக பெருந்தொகையான பணம் வாரிவழங்கப்படுகின்றது.
விளையாட்டுக்கழகங்கள், ஆலயங்கள், பொது அமைப்புகளுக்கு பெருமளவு பணம் வழங்கப்படுகின்றது. அவ்வாறு இலஞ்சம் வழங்கி அந்த தொழிற்சாலை கட்டவேண்டுமா?.
இங்கிருக்கின்ற தானியங்களெல்லாம் அதற்காக பயன்படுத்தப்படும், இதனால் நெல்லை அவர்கள் கூடிய விலைக்கு கொள்வனவு செய்வார்கள்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கூடிய விலைக்கு விற்க முடியும். ஆகவே அத் தொழிற்சாலை வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
அண்மையில் ஏற்பட்ட வறட்சியினால் கமச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டார்கள். இதனால் நெல்லின் விலை அதிகரித்தது.
பன்னிரெண்டு மாதமும் நெல்லை கொள்வனவு செய்யும்போது நெல்லின் விலை அதிகரிக்கப்படுமாக இருந்தால் சாதாரண குடிமகனை அது பாதிக்கும்.
நெல் உற்பத்தியாளர்கள் கூடிய வருமானத்தை பெறலாம். ஆனால் வறிய குடும்பத்தை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
அரிசிக்கு விலை கூடுவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இதுவரை சுற்றுச்சூழலுக்கான சரியான அனுமதிப்பத்திரங்கள் பெறப்படவில்லை.
இது தொடர்பில் ஆராயப்படவேண்டும். இந்த புத்திஜீவிகள் அமைப்புகளுக்கு கூட பல விடயங்கள் தெரியாது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல விடயங்களை ஆராயாத இந்த புத்திஜீவிகள், இந்த மதுசார உற்பத்தி நிலையத்தில் அக்கரைகாட்டிவருகின்றனர்.
கடந்த காலத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றது. அதுசார்பாக இந்த புத்திஜீவிகள் வாய்திறக்கவில்லை.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள் இருந்தது. அது தொடர்பில் வைத்தியராகவுள்ள புத்திஜீவிகள் வெளிப்படுத்தவில்லை.
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் வாயைபொத்திக் கொண்டிருந்தவர்கள் மதுசார உற்பத்திசாலை வரும்போது அதற்கு வியாக்கியானம் செய்ய வருகின்றார்கள் என்றால் அதன் பின்னணியில் பல விடயங்கள் தங்கியுள்ளது என்பதே உண்மை.
அதனை யாரும் மறுக்கமுடியாது. இந்த மதுசார உற்பத்தி நிலையத்தின் பாதிப்பினை சுட்டிக்காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆறு மாகாணசபை உறுப்பினர்களுமாக பன்னிரெண்டு பேர் கையொப்பத்தை வழங்கியிருக்கின்றோம்.
ஜனாதிபதி அவர்கள் போதையற்ற நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கின்றார்.
இந்த வகையில் இம்மதுசார உற்பத்தி நிலையம் இங்கு ஸ்தாபிக்கப்படுவதை அவர் ஏற்கின்றாரா இல்லையா என்பது தொடர்பில் அவருடைய பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
இம்மதுசார உற்பத்தி நிலையம் அமைக்கப்படுவதனால் 250பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும் என சிலர் கூறுகின்றார்கள்.
இவ்வாறு கருத்து கூறுகின்ற புத்திஜீவிகள் அல்லது எமது சமூகம் என தங்களை காட்டிக்கொண்டிருப்பவர்கள் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்தில் தேவபுரத்தில் அமைக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்ட அரிசி ஆலை புனரமைக்க வேண்டுமென்றோ வாழைச்சேனை கடதாசி ஆலையை புனரமைக்க வேண்டுமென்றோ கும்புறுமூலையில் முற்றாக அழிக்கப்பட்ட அச்சகம் மீண்டும்
புதிதாக அமைக்கப்பட வேண்டுமென்றோ அல்லது மக்களுக்கு பயன் தரக்கூடிய மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழிற்பேட்டைகளை இங்கு கொண்டுவர வேண்டுமென்பதை ஏன் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவில்லை?
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலுற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. அப்பாலைக் கொண்டு முடிவுப்பொருட்கள் பலவற்றை செய்ய முடியும்.
அவர்களுக்கான தொழிற்பேட்டைகளை ஆரம்பிக்க வேண்டும், அதற்கான முதலீடுகளை கொண்டுவரவேண்டும் என்பது தொடர்பாக ஏன் இவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை?
நீண்டகாலமாக பிரச்சினை எழுப்பப்பட்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின் தங்களை எமது சமூகம் என்றும் புத்திஜீவிகள் என்றும் காட்டிக்கொண்டு சிலர் வந்திருக்கின்றார்கள்.
சிவில் சமூகத்தில் இருக்கின்ற எல்லோரையும் நாங்கள் குறைகூறவில்லை. பூர்வீகமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வருபவர்கள் தேர்தல் காலங்களில் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
தோற்றபின்னர் ஏதாவது ஒரு குழுவில் சேர்ந்து கொள்வார்கள். அவர்களெல்லாம் ஆராயப்பட வேண்டியவர்கள். புத்திஜீவிகள் குழுவில் இருக்கின்ற சிலர் இன்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச சார்பாக பதிலளிக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
இவர்கள் தேவையான விடயங்கள் ஏராளமாக இருக்கின்றபோது மக்களுக்கு பயன்படாத எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய மதுசார உற்பத்தி நிலையத்திற்காக குரல்கொடுத்து வருகின்றார்கள்.
நெல்லும் தானியங்களும் பயன்படுத்தி மதுசாரம் உற்பத்தி செய்யப்படும் என்பது உண்மையானால் அவர்கள் ஏன் அத் தொழிற்சாலையை பொலன்னறுவையில் அமைக்கவில்லை?
அங்கு தானியங்கள் ஏராளமாக இருக்கின்றது. ஏனெனில் அதை ஜனாதிபதி அனுமதிக்க மாட்டார்.
இந்த அரசாங்கம் ஏன் இதை வடக்கு கிழக்கில் கொண்டு வருகின்றது என்பதில் பாரிய சந்தேகம் இருக்கின்றது.
எங்களுடைய கட்சிக்குள்ளும் அரசாங்கத்திற்கு ஆதரவு இருக்கின்றது. நான் அது இல்லையென்று மறுக்கவில்லை.
அவர்களை பிழையாக சிலர் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்கால பாதிப்புகள் தொடர்பில் நாங்கள் முதலில் ஆராய வேண்டும்.
அதன் பின்னரே நாங்கள் முடிவை கூறவேண்டும். இந்த அரசாங்கம் வருமானத்தை அதிகளவில் ஈட்டுவதற்காக விபச்சார விடுதிகளைக் கூட இங்கு கொண்டுவரலாம்.
அவ்வாறான நிலைமைகளே காணப்படுகின்றன. வடக்கு கிழக்கிலேயே அதையும் ஆரம்பிப்பார்கள்.
மதுசார உற்பத்தி நிலையத்திற்கு ஆதரவு வழங்குகின்றவர்கள் எமது மக்கள் தொழிலில்லாமல் கஷ்டப்படுகின்றார்கள்.
ஆகவே விபச்சார விடுதிகள் தேவை நாங்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அதற்கும் ஆதரவு வழங்குவீர்கள் என்றே நான் நினைக்கின்றேன்.
ஏனெனில் நீங்கள் மக்களின் நலனை கருதவில்லை. தொழில் வாய்ப்பு வேண்டும் என்பதில் நாங்களும் தீவிரமாக இருக்கின்றோம்.
கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு தொழிலின்மை பாரிய பிரச்சனையாக இருக்கின்றது.
பட்டதாரிகள் தொழிலுக்காக வீதிகளில் கிடக்கின்றார்கள். அதற்காக நல்ல தொழிற்பேட்டை வரவேண்டும். மக்களுக்கு ஏற்றவிதத்தில் அது அமைக்கப்படவேண்டும்.
அதை அமைப்பதற்கு அரசாங்கமும் அரசுக்கு ஆதரவான அமைச்சர்களும் புத்திஜீவிகளும் முன்வரவேண்டும்.
சில புத்திஜீவிகள் மற்றும் எமது சமூகம் குழுவிலிருக்கின்ற வைத்தியர்கள் மனித நேயத்துடன் மதுசார தொழிற்சாலை பாதகமானது இதற்கு ஆதரவு வழங்க வேண்டாம் எனும் கருத்தை வெளிப்படுத்துகின்றார்கள்.
ஒரு சிலர் இதற்கு ஆதரவாக பெரிய நிகழ்வு நடத்தி விளக்கமளித்து ஆள்திரட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இதற்கு ஆதரவு வழங்குவதனால் அவர்களுக்கு ஏதோ நன்மை கிடைக்கின்றது என்பதற்காகவே அவர்கள் இவ்வாறு செயற்படுகின்றார்கள்.
ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டது ஒருசிலருக்கு உழைப்பாக மாறியிருக்கின்றது.
அரசாங்கத்தின் பின்னணியில் ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர்கள் கொண்டுவந்து நடத்துகின்றார்கள்.
ஐக்கிய தேசியக்கட்சியை வளர்க்க வேண்டும் என்று விரும்புகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு அத்தொழிற்சாலை அமைக்கப்படுவதில் சந்தோஷம் இருக்கும்.
ஜனாதிபதி அத்தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு ஆதரவை வழங்கினால் போதையற்ற நாட்டை உருவாக்கும் அவரது நோக்கத்திற்கு அது குந்தகமாக அமையும்.
ஆகவே அவருடைய பதிலை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
மதுசார உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபையின் செயலாளருக்கு உத்தரவு இடப்பட்டிருக்கின்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் இதை தடை செய்வதில் உறுதியாக இருக்கின்றார். சகோதர முஸ்லிம் சமூகமும் இதை எதிர்த்து நிற்கின்றது.
எமது தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் தமிழ் முஸ்லிம் உறவில் மிக உறுதியாக இருப்பவர்.
இரண்டு சமூகமும் இணைந்து எதிர்க்கின்ற இத் தொழிற்சாலை இங்கு இயங்குவதற்கு அவர் பூரண ஆதரவு வழங்கமாட்டார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.