‘கயல்’ வின்சென்ட் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தோனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி வரும் ‘அந்தோனி’ எனும் திரைப்படத்தில் கயல் வின்சென்ட் , டி.ஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன் ரவீந்திரன், சௌமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை சுரேஷ் ஏ.பிரசாத் மேற்கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தின் கடற்புற வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை ஓசை பிலிம்ஸ், விஜய் பாலசிங்கம் பிலிம்ஸ், ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ், கனா புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
ஒரே கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது . இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான பிரத்யேக காணொளியையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை வெளியிடுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.