கனேடிய தம்பதியினர் அமெரிக்காவில் கைது
சீனாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கலந்த மாத்திரைகளை (opioid) இறக்குமதி செய்து, கனடாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்த கனேடிய தம்பதியினர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
59 வயதான கார்ல் மற்றும் சோரினா மோரிசன் ஆகிய கனேடிய தம்பதியினர், மாத்திரைகளுடன் நியூயோர்க்கில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிப் பகுதியைக் கடந்து பயணித்த வேளை கடந்த மாதம் அமெரிக்க பொலிஸாரரால் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் மீது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை மீறி பொருளொன்றை இறக்குமதி செய்தமை மற்றும் ஏற்றுமதி செய்ய முற்பட்டமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைதானவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், விரைவில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தலா 20 வருட சிறைத் தண்டனை கிடைக்கப் பெறலாம் எனவம், 1 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை அபராதமாக செலுத்த நேரிடும் எனவும் கூறப்படுகின்றது.