கனடாவில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சிறுவர்கள் கைது
ரொறொன்றோ நகரில் உள்ள North York பகுதியில் பெயர் வெளியிடப்படாத வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த வணிக வளாகத்தில் கடந்த திங்கள் கிழமை மாலை 7 மணியளவில் இரு சிறுவர்கள் முகமூடியுடன் திடீரென நுழைந்துள்ளனர்.
இருவரில் ஒருவன் துப்பாக்கியை எடுத்து அங்குள்ளவர்களை மிரட்டியுள்ளான். பின்னர், வணிக வளாகத்தில் ஆயிரக்கணக்கான டொலர்களை திருடிய இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த பொலிசார் வணிக வளாகத்தை சுற்றி தேடியபோது கொள்ளையர்கள் பயன்படுத்திய துப்பாக்கி கிடைத்துள்ளது.
இது தொடர்பாக பொலிசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், கொள்ளையில் ஈடுப்பட்ட 16 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்களை கைது செய்துள்ளதாகவும் இருவர் மீதும் 9 குற்றங்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கனடா நாட்டு சட்டப்படி குற்றம் புரிந்தவர்கள் சிறுவர்களாக இருந்தால் அவர்களுடைய பெயர்களை வெளியிடக்கூடாது என்பதால் பொலிசார் இருவரின் பெயர்களையும் வெளியிடவில்லை.
வணிக வளாகத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இருவரும் எதிர்வரும் செவ்வாய் கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.