பாலியல் குற்றம் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாஸ்கர் முனியப்பா என்ற குறித்த நபர் தான் பிளாக் மேஜிக் மற்றும் காதல் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் சர்வதேச ரீதியாக பிரபலமடைந்துள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த விளம்பரங்களை நம்பி அவரிடம் வரும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொள்வதாக தகவல்கள் வௌியாகியமைக்கு அமைவாக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் காதல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் சுண்ணாம்பு துண்டுகளை தேய்த்து, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து குணப்படுத்துவதாக ஏமாற்றியுள்தாக வழக்கறிஞர் போல்சம்போனினி தெரிவித்துள்ளார்.
32 வயதுடைய இவர் திருமணமானவர் எனவும் அவரின் மனைவி இலங்கையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு குறித்த நபர் கனடா நோக்கி சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாஸ்கர் முனியப்பா கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில ், இவ்வருடம் பெப்ரவரி மாதம் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எவ்வாறாயினும் , அவரின் வசிப்பிடத்தை காவற்துறைக்கு அறிவிக்காமல் மாற்றியுள்ளதால் தற்போதைய நிலையில் அவரின் பிணை நிராகரிக்கப்பட்டு அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனக்கு எதிர்காலம் தொடர்பில் கணித்து கூறமுடியும் என கூறும் பாஸ்கர் , தான் கனடாவில் இருந்து நாடுகடத்தப்படுவதாகவும் எதிர்காலத்தில் மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.