கனடாத் தமிழர்கள் பெருவிழா – பங்கு பெறாமல் தவிர்த்தார் கனடியப் பிரதமர் – தமிழர்கள் பெருங்கவலை
சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கலந்து கொள்ளும் கனடியத் தமிழர் பெருவிழாவில் கனடியப் பிரதமர் இன்று பங்குபற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அது கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.
கனடியத் தமிழர்களிற்கு மிகவும் பிடித்தமானவராகவும், கடந்த வருடம் இடம்பெற்ற தமிழர் தெருவிழாவில் கலக்கல் நாயகனாகவும் கலந்து கொண்ட கனடியப் பிரதமர் இந்த வருட விழாவில் கலந்து கொண்டு மாகாண சபைக்குப் போட்டியிடும் லிபரல் கட்சி வேட்பாளரை பிரபல்யப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருந்த போதும் மாகாண லிபரல் கட்சியும் மத்திய லிபரல் கட்சியும் வேறு வேறானவை. இரண்டிற்கும் வேறுபட்ட கொள்கைகள், வேறுபட்ட தலைவர்கள் என்ற வகையில் மாகாண லிபரல்கட்சியின் போக்கில் பிரதமர் நாட்டங்கொள்ளவில்லையென நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக தற்போதைய லிபரல் மாகாண அரசு பல பொலிஸ் விசாரணைகளிற்கு முகங் கொடுத்துள்ள காரணத்தாலும், மாகாண லிபரல் கட்சியின் ஆதரவு சரிந்துள்ளதாலும் பிரதமரின் பிரசண்ணம் தவறான தகவல்களை மாகாணத் தேர்தலில் கொடுத்து விடலாம் என்ற அச்சமும் காரணமாகக் காட்டப்பட்டுள்ளது,
மத்திய பாராளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரியும் பிரதமர் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையென்பதை உறுதிப்படுத்தி நாளை பிரதமர் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
இருந்த போதும் தமிழர்களின் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்ற பிரதமர் பதவிக்கு வந்த பின்னர் எந்தத் தமிழர் விழாவிலும் கலந்து கொள்ளவில்லையென்பதையும் இதற்கான காரணம் கண்டறியப்பட வேண்டுமென்பதையும் இன்னொரு செய்தி சுட்டிக் காட்டுகின்றது.
பிரதமர் இன்றைய நிகழ்விற்கு வருகை தராதது வேறு விதமான செய்தியைத் தெரிவிக்கின்றது என்று தெரிவித்த நீதன் சாண் தனது வெற்றியை நோக்கிய பயணத்தில் தான் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாகவும், தமிழர்கள் தன்னை ஆதரிப்பார்கள் என்பதை நம்புவதாகவும் தெரிவித்தார்.
பிரகல் திரு இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில் கனடியப் பிரதமரின் விஜயம் பற்றித் தான் ஏதும் அறிந்திருக்கவில்லையென்றும் அவரது வருகையை விட தான் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்குக்களைப் பெறுவதே சிறந்தது என நம்புவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் கனடிய அரசியல் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்கள் எனவும், அவர்களிற்கு மாகாண-மத்திய அரசியல் பற்றிய தெளிவான பார்வை உள்ளனதெனவும் முன்னேற்றவாதக் கட்சியின் வேட்பாளர் றேமண்ட் சோ தெரிவித்தார்.
எனவே பிரதமர் இன்று தமிழர் விழாவில் கலந்து கொண்டு மாகாண லிபரல் கட்சி வேட்பாளரை பிரபல்யப்படுத்த முனைந்து அந்த வேட்பாளர் தோற்றால் அது பிரதமரின் ஆளுமையில் அபநம்பிக்கையை ஏற்படுத்தும் என ஒரு சாரார் கருதினாலும்,
தமிழர்களிற்கான பெருவிழாவானது ரொறன்ரோ நகரித்தின் முதன்மையாக நிகழ்வுகளில் ஒன்று என்ற காரணத்தினால் பிரதமர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மாகாண லிபரல் கட்சியும் மத்திய லிபரல் கட்சியும் வேறு வேறு என்பதை மக்கள் அறிவார்கள் என்பதை சமூக ஆர்வலரொருவர் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கமான கனடியத் தேசிய நீரோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் இரண்டு வாரங்களிற்கு முன்னர் தமிழர் தெருவிழாவிற்கான வருகை இருந்தாக அறிந்திருந்ததாகவும், பின்னர் அது அவரது பயண விவகாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தார்
கனடியப் பிரதமர் இன்றைய நிகழ்விற்கு வரலாம் என்ற ஹேஸ்ய செய்திகளை கனடா மிரர் கடந்த வாரமே தந்திருந்ததோடு, விற்பி-ஒசாவாவில் நடந்த இடைத்தேர்தலில் கனடியப் பிரதமர் மாகாண லிபரல் கட்சி லிபரல் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த போதும் அவர் வெற்றி பெறவில்லை. எனவே மாகாண மற்றும் மத்திய அரசியல் விருப்புக்களில் மக்கள் வெவ்வேறு நிலைகளை வெளிப்படுத்துகின்றனர் என்பதையும் தெரிவித்திருந்தது.
கடந்த வருடத் தமிழர் தெருவிழாவில் ஹரி ஆனந்தசங்கரியுடன் கொத்து ரொட்டி தயாரிக்கும் கனடிய இந்நாள் பிரதமர்