கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்! பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான்
கிளிநொச்சி, கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் நேற்று மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது கரைச்சி பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பொதுச் சமாதி அமைக்கும் நிறுத்துமாறு கோரியிருந்தார்.
ஆனால், ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட, சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் றொசான் ராஜபக்ஸ தலைமையில் பொலிஸார் ஏற்பாட்டாளர்களுடன் சமரசமாக பேசி வியாழன் மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் நேற்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு கூறியிருந்தனர்.
அதனடிப்டையில் நேற்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்று துயிலுமில்லத்தில் பொதுச் சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐவர் முன்னிலையாகிருந்தனர். இவர்கள் சார்பாக மூன்று சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.
கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் முறைபாட்டையடுத்து, கிளிநொச்சி பொலிஸார் இவர்கள் மீது சட்ட விரோதமாக காணிக்குள் உள்நுழைந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டனர் என்றே வழக்கு பதிவு செய்திருந்தனர்.
அத்தோடு கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்குள் எவரும் உட்பிரவேசிக்காமல் இருப்பதற்கு நீதிமன்றத்திடம் தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸார் கோரிய போது அதனை நிராகரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, குற்றவியல் வழக்கான 433 மற்றும் 490 கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கொன்றிற்கு இவ்வாறான தடையுத்தரவு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டார்.
அத்தோடு நீதிமன்றம் பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஐந்து பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வழக்கை எதிர்வரும் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.