தண்ணீரைக்கூட தவறி மிதித்ததில்லை… கண்ணீரைவிட்டு கலங்குவதேன் முருகா…
சூதாடித் தோற்றவருக்குத் துணையிருந்தாய் முருகா…வாதாடித் தோற்ற எமக்குத் துணையாக மாட்டாயோ முருகா..
சோகக் குரல் எடுத்துப் பாடி, இறைவனோடு வழக்காடிக் கொண்டிருக்கிறார் வெற்றிவேல் சோமணி.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகனின் தாயார். மகனைக் காண இலங்கையில் இருந்து வந்தவருக்கு 22 நாட்களாக அனுமதி கிடைக்கவில்லை.
மனம் நொந்து புலம்பிக்கொண்டிருந்தவரைச் சந்தித்த போது.
முருகனை இந்த முறை பார்க்க வந்ததற்கு ஏதேனும் தனிக் காரணம் இருக்கிறதா?
பிள்ளையைத் தாய் பார்க்கக் காரணம் ஏதாவது இருக்க வேண்டுமா ஐயா? என் பிள்ளை இன்றைக்குக் காவி உடுத்தி, தாடி வளர்த்து, உலகை வெறுத்து இருக்கிறான். அந்தக் கோலம் எந்தத் தாய்க்கு சந்தோஷம் தரும்?
அவன் உடல்நிலையும் மோசமாக இருக்கிறது. என்ட உடல்நிலையும் அப்படித்தான். ஒரு நாளைக்கு 22 மாத்திரைகள் போட்டுக்கொண்டிருக்கிறேன். என் கணவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அடுத்த மாதம் ஓப்பரேசன் செய்ய உள்ளார். அதற்கு முன் என்ட மகனை ஒருமுறை பார்த்து விடுவதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தேன்.
சிறை அதிகாரிகள் முருகனின் சந்திப்புக்கு அனுமதி மறுத்தது ஏன்?
முருகன் செல்போன் வைத்திருந்து பேசியதாகக் குற்றச்சாட்டு. அதனால், என்ட பிள்ளையைப் பார்க்க என்னை அனுமதிக்க மறுக்கிறார்கள். நான் என் கணவரைப் பார்க்க அங்கே போவதா… இல்லை, என் பிள்ளையைப் பார்க்க இங்கே இருப்பதா? எனத் தெரியாமல் செத்துக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் குடும்பம் சந்திக்கும் இவ்வளவு துயரங்களுக்குக் காரணமான ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் முருகன்-நளினிக்குத் தொடர்பே இல்லையா?
என்ட பிள்ளைக்கும், நளினிக்கும் மட்டுமல்ல ஐயா… இப்போது சிறையில் இருக்கும் யாருக்குமே அதில் தொடர்பு இல்லை. ‘அந்தச் சம்பவத்தை நடத்தியவர்களோடு முருகன் கதைத்தார்… கூடி இருந்தார்’ என்பது குற்றச்சாட்டு.
நான் இலங்கையில் இருந்து இப்போது இங்கு வந்திருக்கன். இங்கு இலங்கையரைப் பார்த்தால், ‘தம்பி எங்கட இருக்க… எங்கட வந்த?’ என்று கதைப்பேன்தானே? அப்படித்தான் முருகனுக்கும் அந்தச் சம்பவத்தை நடத்தியவர்களுக்கும் இருந்த தொடர்பு. அதற்காக இத்தனை ஆண்டுகளாகச் சிறையில் அடைத்து வைப்பதா ஐயா?
1987 காலகட்டத்தில் இலங்கையில் சூழல் சிரமமாக மாறியது. என்ட பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற முடிவெடுத்தேன். முருகனை சுவிஸ் நாட்டில் இருக்கும் என் தங்கச்சியிடம் சேர்க்க நினைத்தேன். அதற்குத்தான் என்ட பிள்ளை சென்னையில் தங்கி இருந்தான்.
உங்கள் குடும்பம் இப்போது ஓரளவுக்கு நெருக்கடிகளில் இருந்து மீண்டுவிட்டதா?
1991-க்குப் பிறகு, எங்கட குடும்பம் சந்திச்ச துன்பங்கள் எல்லாம் மகாபாரதத்தை விட பத்து மடங்கு அதிகம். அவற்றைச் சொல்லி மாளாது. ஆண்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதியில்லை.
ஆனாலும் என்ட பிள்ளையைப் பார்த்தேயாக வேண்டும் என்ற நோக்கத்தில், மட்டை வெட்டி காசு சேர்த்து, யார் யாரையோ பிடித்து, பூந்தமல்லியில் வந்து பார்த்தேன்.
எனக்கு ஒன்பது பிள்ளைகள். அவர்களைக் காப்பாற்ற, ஒரு கிலோ அரிசிக்கு உழைக்கிறதா… இவர்களுடைய வழக்குக்குப் பார்க்கிறதா? கஷ்டம்தான்.
தமிழக மக்களுக்கு ஏதேனும் கோரிக்கை வைக்கிறீர்களா?
உணர்வாளர்கள், ஆதரவாளர்கள், மாணவர்கள் ஒன்றுகூடி எங்கட பிள்ளைகளுக்குக் குரல் கொடுத்து அவர்களின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக நிறுத்தி வைத்துள்ளனர். அதைச் செய்த ஒவ்வொருவருக்கும் கைகூப்பி, கோடி முறை வணக்கம் தெரிவிக்கிறேன்.
இந்தப் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்ற தன்னுயிரை நிறுத்திக்கொண்ட செங்கொடியின் படம் எப்போதும் என் தலைமாட்டில் இருக்கும். அதுபோலத்தான் தம்பி முத்துக்குமார். இந்தப் பிள்ளைகளின் மரணம் எனக்குக் கொடூரத் துயரமாக இருக்கிறது.
நளினி-முருகன் மகள் அரித்ரா எப்படி இருக்கிறார்?
ஊரில் நாலு குமரோடு (பெண் பிள்ளைகளோடு) இருந்தேன். அவர்களோடு இந்தப் பிள்ளையையும் பார்த்துக்கொண்டேன். அரித்ராவுக்குப் பட்ட கஷ்டங்கள்… முருகனுக்கு நான் பட்ட கஷ்டங்களில் பாதி.
உங்களின் தற்போதைய விருப்பம் என்ன?
என்ட பிள்ளை 20 வயதுல பிடிபட்டான். 26 வருஷம் ஜெயிலில் இருந்து விட்டான். அவனும் மற்ற ஏழு பிள்ளைகளும் விடுதலையாகி, மிச்சம் இருக்கும் கொஞ்ச நாட்களையாவது மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அதுதான் எங்கட ஆசை.
– Vikatan