பச்சை மிளகாய், கறி மிளகாய் போன்றவை கண்டிப் பிரதேசத்தில் ஒரு கிலோ 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தம்புள்ளை மற்றும் கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் பச்சை மிளகாய் ஒரு கிலோ 1,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து கண்டிப் பிரதேசத்தில் அவற்றின் சில்லறை விலைகளும் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களாக கறி மிளகாய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், மழைக்காலத்தை அடுத்து பச்சை மிளகாயின் விலையும் அதிகரித்துள்ளது.
அதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களுக்கு குறைந்த அளவே மிளகாய் வகைகள் வந்து சேர்வதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவும் விலையேற்றத்திற்கு மற்றுமொரு காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கறி மிளகாய் மற்றும் பச்சை மிளகாய் தவிர ஏனைய காய்கறிகளின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. தற்போது கரட்டின் மொத்த விலை 400 ரூபாவாக அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.