முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் சிறிலங்கா செல்லும் கோத்தபாயவை கைது செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹரவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ச, கைது செய்யப்படும் அச்சத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
உக்ரேனிடம் மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்த நீதி விசாரணைகளில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை அறிந்தே கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குத் தப்பியோடியுள்ளார்.
எதிர்வரும் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 12ம் திகதி சிறிலங்காவுக்கு கோத்தபாய திரும்பவுள்ளார்.
அவரைக் கைது செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கோத்தாபய ராஜபக்ச சிறைக்கு அனுப்பப்படுவார்.