ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த எதிர்வரும் மே மாதத்திற்குள் ஜனாதிபதி கடுமையான சில தீர்மானங்களை எடுக்க எண்ணியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் நாட்டில் பல மாற்றங்களை செய்ய ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் நேற்றிரவு எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் மே தினம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதி எடுக்க போகும் இந்த முடிவுகள் மூலம் கட்சி வலுவடைவது போல், கட்சியினரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை திருகோணமலை துறைமுகத்தில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்குவதை எதிர்த்தும் மூன்று கோரிக்கைகளை முன்வைத்தும் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் 6 தொழிற்சங்கங்கள் இன்று ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் எவ்வித அடிப்படையும் இல்லாத போராட்டம்.
இதனால், அரசாங்கத்தின் தீர்மானங்களில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.