‘கடவுள் இருக்கான் குமாரு’ அப்டேட்: கவுரவ தோற்றத்தில் சந்தானம்
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் சந்தானம்.
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தைத் தொடர்ந்து ‘ப்ரூஸ் லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஆனந்தி, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷ் உடன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் மலேசியாவில் பாடல் காட்சிகளை படமாக்கிவிட்டு திரும்பி இருக்கிறது படக்குழு. இதுவரை 90% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது.
ராஜேஷ் படம் என்றாலே சந்தானம் பிரதான வேடத்தில் நடிப்பார். ஆனால், இப்படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக கெளரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் படமாக்க இருக்கிறது படக்குழு.
தற்போது ‘ப்ரூஸ் லீ’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் ஜி.வி.பிரகாஷ் அதனைத் தொடர்ந்து ‘கடவுள் இருக்கான் குமாரு’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.