அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து 12 அமைச்சர்களும் 35 எம்எல்ஏ-க்களும் ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு வரத் தயாராக உள்ளதாக, எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.கவில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஆலோசனை செய்த வண்ணம் உள்ளனர். சசிகலா குடும்பத்தையும் தினகரனையும் கட்சியிலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என்னும் நிபந்தனையை ஓ.பி.எஸ் அணியினர் முன்வைத்தனர்.
அதற்கு, எடப்பாடி பழனிசாமி அணி ஒப்புக்கொண்டனர். டி.டி.வி.தினகரன், தானாகவே கட்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.
இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்த இரு அணிகளிலும் குழு அமைக்கப்பட்டது. ஆனால், கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதால், பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், மேட்டூர் தொகுதி அ.தி.மு.க எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, சேலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்தில் பேசிய அ.தி.மு.க. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த செம்மலை, ‘ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற எண்ணம் பன்னீர்செல்வத்துக்கு இல்லை.
தற்போது 15 அமைச்சர்களும் 35 எம்எல்ஏ-க்களும் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளனர். அ.தி.மு.க பிளவுப்பட்டிருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, முதல்வராகிவிடலாம் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நினைத்துக்கொண்டிருக்கிறார். அப்படியெல்லாம் நடக்காது’, என்று கூறினார்.