சமீபத்தில் வெளியான 90எம்எல் படத்தில் ஓவியா, படுக்கை அறை, முத்தக்காட்சி, புகை, மது, தாராளமாக நடித்திருந்தார். இதனால் அவருக்கும் படத்தை இயக்கிய அனிதா உதிப்புக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்திய தேசிய லீக் கட்சியின் சார்பில் அதன் மகளிர் அணி தலைவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு கலாச்சார பேரவையின் சார்பில், அதன் சட்ட ஆலோசகர் பன்னீர் செல்வம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் ஓவியா மீது புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஓவியா நடித்துள்ள 90 எம்.எல். படத்தில், பாலுணர்வை தூண்டும் ஆபாச காட்சிகள் உள்ளன. இது தமிழ் பண்பாடு, கலாசாரத்துக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல் உள்ளது. எனவே ஓவியா மீதும், தயாரிப்பாளர், இயக்குனர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். படத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.