ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பொலிஸார் சுட்டுக் கொலை
தீவிரவாத செயற்பாடுகளிலிருந்து விடுதலை பெற்று, அரச பாதுகாப்பு படையில் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பொலிஸார் சுட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
வடமேற்கு ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தின் அல்மார் மாவட்டத்திலுள்ள, சோதனை சாவடிக்கருகில் வைத்தே குறித்த 8 பொலிஸாரும், உடன் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தராலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த கொலைகள், அப்பகுதியிலுள்ள தலிபான் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தலிபான் அமைப்பிலிருந்து விலகிவந்த குறித்த 8 பேரும், அந்நாட்டு பாதுகாப்பு படையில் இணைந்து சில நாட்களிலேயே கொல்லப்பட்டுள்ளமையானது அல்மார் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த கொலையுடன் தொடர்புடையதாக, தலிபான் அமைப்பை சேர்ந்தவராக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டும் சரணடைந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.