ஒரு மாதம் ஓய்வெடுக்க கமலுக்கு மருத்துவர்கள் அறிவுரை
நடிகர் கமல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சை இன்னும் தொடர்கிறது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, “கமல்ஹாசன் இன்னும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது. கால் எலும்பு முறிந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் இன்னும் அப்சர்வேஷனில் வைக்கப்பட்டுள்ளார்.
கமல்ஹாசன் குறைந்தது ஒரு மாதத்துக்காவது முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
‘சபாஷ் நாயுடு’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால், தற்போது படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளிப்போய் இருக்கிறது”.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் படம் ‘சபாஷ் நாயுடு’. இதன் ஒரு பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் அண்மையில்தான் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பினார்.
ஹைதராபாத்தில் அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விபத்து நடந்துள்ளது.