ஐ.நா பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டுவந்த தமிழர்!
1987 மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் காரணமான மனித உரிமை செயற்பாட்டாளர் சேவியர் அவர்களின் இழப்பு பேரிழப்பாகும் என மனிதவுரிமை செயற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபல சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர் பிரான்சிஸ் சேவியர் அவர்கள் ஜூன் 10. 2016 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் காலம் ஆகினார்.
அவரின் நினைவு தினம் அண்மையில் மட்டக்களப்பு மனித உரிமைகள் இல்லத்தில் நடைபெற்ற போதே மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான முதல் பிரேரணையை கொண்டு வரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் உழைத்த மனிதர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூலை 25, 1933இல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்த இவர், தனது இளமைக்காலத்தினை யாழ்ப்பாணத்திலேயே கழித்திருந்தார். ஆரம்பத்தில் தபாலதிபராக நியமணம் பெற்றிருந்த அவர் தனது விடாமுயற்சி, கல்வியறிவு மற்றும் தனிப்பட்ட ஆளுமைகளின் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதியினை பெற்று சட்டத்தரணியானார்.
இலங்கையில் இனமுரண்பாடுகள் காரணமாக நலிவுற்றிருந்த தமிழ் சமூகத்திற்கு தன்னார்வத்தின் அடிப்படையில் சேவையாற்றத்தொடங்கிய இவர் 1977ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மனித உரிமைகள் இல்லத்தினை ஸ்தாபித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட ரீதியான தனது இலவச சேவைகளை நிறுவனமயப்படுத்தியிருந்தார்.
தொடர்ந்து, யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கிவந்த மனித உரிமைகள் இல்லத்தின் கிளையினை அக்காலக் கட்டத்திலிருந்த அவசியப்பாடுகளின் அடிப்படையில் 1984இல் கொழும்பில் ஆரம்பித்திருந்தார்.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த வன்முறைகள் தொடர்பில் உலக அரங்கில் அனைவரதும் கவனத்தினை ஈர்ப்பதில் பெரிதும் பாடுபட்டுவந்த திருவாளர். சேவியர் அவர்கள் 1987 மார்ச் மாதம் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முதல் பிரேரணை கொண்டு வரப்படுவதற்கும் நிறைவேற்றப் படுவதற்கும் முதற்காரணமானவராவார்.
மேலும் ஜெனீவாவை தளமாக கொண்டியங்கும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நாவின் வலையமைப்பில் மூன்று ஆண்டுகள் வரை பணியாற்றியிருந்த அவர் அதன் பின்னதாக இலங்கைக்கு திரும்பி தனது பணிகளை தொடர்ந்த நிலையில், 1988 காலப்பகுதியில் சட்டத்தரணி கே.கந்தசாமி (ரி.ஆர்.ஓ) அவர்கள் காணாமல் போகடிக்கப்பட்டதனை தொடர்ந்து, திருவாளர். சேவியர் மீதும் உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் கனடாவிற்கு தனது குடும்பத்தோடு புலம்பெயர்வதற்கு நிர்ப்பந்தப்படுத்தப்பட்டிருந்த இவர் அங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கான சட்ட உதவிகளை வழங்குவதில் ஆர்வத்தோடு செயற்பட்டு வந்துள்ளார். மேலும், சிறைகளில் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பில் முன்னின்று குரல் கொடுத்த இவர், 1983ம் ஆண்டு தொடங்கி பிரபல வழக்குகளான கொக்கட்டிச்சோலை நல்லநாயகம், வண. பிதா. சிங்கராஜா, என். நித்தியானந்தம் மற்றும் தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் பலரதும் வழக்குகளுக்கு இவரே சட்ட உதவிகளை வழங்கியிருந்தார் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.
ஒழுங்கமைக்கப்பட்ட வடிவிலான ஆவணப்படுத்தல் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்தி உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதற்கான தகுந்த நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டிருந்தார்.
இவரால் ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகள் இல்லமானது தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பகுதிகளில் தனது கிளைகளை பரப்பி பல்லாயிரக்கணக்கிலான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்களுக்காக சேவையாற்றி வருவதற்கு தனது ஆதரவினையும் ஒத்தாசையினையும் இவர் தொடர்ந்து வழங்கி வந்துள்ளார்.
போர் மற்றும் இனமுரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வு தொடர்பில் மிகவும் கரிசனையோடு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதில் அல்லது பெற்றுக்கொடுப்பதில் தன்னாலான பங்களிப்பினை வழங்கிக்கொண்டிருந்த திருவாளர். பிரான்சிஸ் சேவியர் ஐயா அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் மனித உரிமைகள் சார்ந்த பணிகளுக்காகவும், சிறையிடப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் தமிழ் மக்களின் நலனுக்காகவும் தன்னாலான அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவந்த இவரின் மறைவானது தமிழ் சமூகத்திற்கு ஓர் பெரும் இழப்பாகும் என்பது என்றும் நினைவில் கொள்ளத்தக்கது.