ஐ.நா.தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணங்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மனிய பாராளுமன்றத் தலைவர் பேராசிரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலைமையிலான குழுவினரை சந்தித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் பாராளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சுமார் ஒருமணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலானதும் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என அக்குழுவினரிடத்தில் வலியுறுத்திய எதிர்க்கட்சித்தலைவர் அக்கருமத்தை வெற்றி கொள்வதற்கு ஜேர்மன் உட்பட சர்வதேச சமூகம் கூட்டமைப்பிற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 34வது அமர்விலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையான நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் இணங்கினால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரணமான ஒத்துழைப்பை வழங்கும் என அவர்களித்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் செயற்பாட்டில் எமது நிலைப்பாட்டை தௌிவுபடுத்தினேன்.
விசேடமாக தமிழ் மக்களின் அபிலாஷைகள் புதிய அரசியலமைப்பின் ஊடாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டும். நீடித்து நிலைத்து நிற்கும் வகையிலும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அமைய வேண்டும். அந்தக் கருமத்தில் வெற்றிக் கொள்வதற்கு சர்வதேச சமூகம் எமக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் எனவும் கோரியுள்ளேன்.
இதனை விடவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளும் குறித்தும் அவர்களிடத்தில் எடுத்துரைத்தேன். குறிப்பாக காணி விடுவிக்கும் கருமம் மந்த கதியில் நடைபெறுகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் கருமம் முழுமை பெறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினேன்.
இச்சமயத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பாக அக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
அதன்போது அந்த போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிகளவு கரிசனை காட்ட வேண்டியதன் அவசியத்தை அவர்களிடத்தில் முன்வைத்துள்ளேன் என்றார்.