ஐ.நா தீர்மானத்துக்கு பரிந்துரைகளை வழங்கிய பன்னாட்டு நிபுணர்குழு! ஏற்குமா உறுப்பு நாடுகள்?
கடந்த தீர்மானம் HRC Resolution 30/1 முன்வைத்த நிலைமாறுகால நீதிக்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டுடன், கடந்த மாதம் 10 ஆம் திகதி ஐ.நா ஆணையாளர் சயித் அல் உசேன் ஸ்ரீலங்கா தொடர்பிலான தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ள விடயங்கள் உள்ளடக்கப்படுதல் அவசியம் என பன்னாட்டு நிபுணர் குழு பரிந்துரைந்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தினை உரிய கால அளவுகளுக்குள் நிறைவேற்றாத பட்சத்தில், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஸ்ரீலங்கா விவகாரம் பரப்பப்படும் என்ற எச்சரிக்கையினையும் தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என பன்னாட்டு நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
ஐ.நா தீர்மானத்தினை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டினை உறுதி செய்வதோடு, ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்தவதற்குரிய கால அளவுகள் வகுக்கப்பட்டு நிரல்படுத்தப்பட வேண்டும் என்பதும் நிபுணர்குழுவின் பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்த 30/1 தீர்மானத்தில், ஸ்ரீலங்காவின் கடப்பாடுகளை கண்காணிக்கவென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதே இந்த பன்னாட்டு நிபுணர் குழு.
போர்க்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என பாரிய மனித உரிமை விவகாரங்களில் கம்போடியா, சியறா லியோன் என பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்களில் சர்வதேச நீதிமன்றத்தளங்களில் பங்காற்றியிருந்த ஆறு முக்கிய நிபுணர்கள் இதில் பங்காற்றியுள்ளனர்.
மேலும், சமீபத்தில் ஜெனிவா ப்றஸ் கிளப்பில் தமது அறிக்கையினை பன்னாட்டு நிபுணர் குழு வெளியிட்டிருந்ததோடு, ஐ.நா மனித உரிமைச்சபையின் கேட்போர் கூடத்தில் பக்க நிகழ்வொன்றினையையும் நடாத்தியுள்ளது.