ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனை மட்டக்களப்புக்கு விஜயம் செய்யுமாறு வேண்டுகோள்
இது தொடர்பில் வேண்டுகோள் விடுத்து இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலம் ஆகியவற்றுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், 03 நாள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அவர் தங்கியிருக்கும் 03 நாட்களில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திக்கவுள்ளதுடன், காலி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
கடந்த யுத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டவையாகும். இறுதி யுத்தம் வடமாகாணத்தில் இடம்பெற்றிருந்தாலும், 2009ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்திலும் பாரிய யுத்தம் இடம்பெற்றது.
இம்மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போனதுடன், அவர்களை இன்னும் அவர்களின் குடும்ப உறவினர்கள் தேடி வருகின்றனர்.
இங்கு பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்டதுடன், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கென்று ஒரு வீடு கூட இல்லாத நிலையில் உறவினர்கள் வீடுகளிலும் அகதி முகாம்களிலும் வாழ்கின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வடமாகாணத்தை விட கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம்கள் வாழ்வதுடன், இவர்கள் கடந்த யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களின் குறைநிறைகளை கேட்டறிவது தொடர்பில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறதென்ற உண்மை மறைக்க முடியாதாகும்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் புறக்கணிக்கப்பட்டு, இங்குள்ள மக்களின் அவலக்குரல்கள் உரிய இடங்களுக்கு போய்ச்சேராமல், அவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் இருப்பதென்ற விடயம் மறைக்க முடியாதாகும்.
அதிலும் குறிப்பாக, முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இன்றுவரை ஆதாரங்கள் இருக்கின்றன.
மிக அதிகமான இழப்புகளை முஸ்லிம்கள் சந்தித்திருந்ததுடன், இவ்வாறான விடயங்களை சர்வதேச முகவர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இலங்கைக்கு வரும்போது, இம்மக்களின் துன்பங்களை கேட்காமலும் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புகளின் குரல்களை கேட்காமலும் இருக்கின்றமை கவலைக்குரியதாகும்.
ஆகவே, ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாம் கேட்கும் விடயம் என்னவென்றால், இம்முறை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமான மட்டக்களப்புக்கு அவர் விஜயம் மேற்கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களின் துன்பங்களை கேட்டறிவதற்காக ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.