’ஐ.நா சபை பொதுச் செயலாளராக பெண் ஒருவர் பதவி ஏற்க வேண்டும்’ – பான் கி-மூன்
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய பொதுச் செயலாளராக பெண் ஒருவர் பதவி ஏற்க வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என தற்போதைய பொதுச் செயலாளரான பான் கி-மூன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.நா சபையின் பொதுச் செயலாளரான பான் கி-மூனின் பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதி முதல் முடிவடைகிறது. இதற்கு முன்னதாகவே தேர்தல் நடைபெறவுள்ளது.
ஐ.நா சபையின் ஒரு அங்கமான பாதுகாப்பு கவுன்சிலை தெரிவு செய்யும் 15 நாடுகள் புதிய பொதுச் செயலாளரை சிபாரிசு செய்ய வேண்டும்.
இதற்கு அடுத்தக்கட்டத்தில் நடைபெறும் தேர்தலில் 193 நாடுகள் வாக்களிக்கும்போது இதில் பெரும்பான்மை பெறுபவர் ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்படுவார்.
ஐ.நா சபை உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பொதுச் செயலாளர் பதவி வகித்த 8 தலைவர்களும் ஆண்கள் தான்.
இந்நிலையில், செய்தியாளர்களை நேற்று சந்தித்த பான் கி-மூன், ‘ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக ஒரு பெண் தெரிவு செய்யப்பட வேண்டும்’ என்பதையே தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
எனினும், எந்த பெண் தலைவரையும் அவர் குறிப்பிட்டு பேசவில்லை.
‘இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் பெண் தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். உலக மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக விளங்கி வருகின்றனர்.
இதுபோன்ற எண்ணங்கள் உடைய ஒரு பெண் ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்று உலக மக்களை பாதுகாக்க வேண்டும்’ என பான் கி-மூன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பொது தேர்தலில் 5 பெண் தலைவர்கள் உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த 11 தலைவர்களின் விபரங்களின் பட்டியல்
1. இரினா போக்குவா, UNESCO பொது இயக்குனர், பல்கேரியா
2. ஹெலன் கிளார்க், முன்னாள் பிரதமர், நியூசிலாந்து
3. கிரிஸ்ட்டினா ஃபிகரர்ஸ், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாட்டின் நிர்வாக செயலாளர், கோஸ்டா ரிகா
4. நடாலியா கெர்மான், பிரதமர், மோல்டோவா
5. ஆண்டோனியோ குடெர்ரெஸ், முன்னாள் பிரதமர், போர்ச்சுகல்
6. உக் ஜெரெமிக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், செர்பியா
7. செர்ஜ்ன் கெரீம், ஐ.நா பொதுச்சபையின் முன்னாள் தலைவர், மசிடோனியா
8. மிரோஸ்லேவ் லஜ்கக், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், ஸ்லோவோகியா
9. இகோர் லுக்சிக், முன்னாள் பிரதமர், மோண்டேனேக்ரோ
10. சூசனா மல்கோரா, வெளியுறவுத்துறை அமைச்சர், அர்ஜெண்டினா
11. டனிலோ துர்க், முன்னாள் ஜனாதிபதி, ஸ்லோவேனியா
இந்த வேட்பாளர்களில் போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான ஆண்டோனியோ குடெர்ரெசுக்கு ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக பதவி ஏற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.