ஐ.நாவில் வெடித்தது சர்ச்சை : முன்னாள் கடற்படை தளபதிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையில் உக்கிர கருத்து மோதல்
முன்னாள் கடற்படை தளபதிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அறையில் இடம்பெற்ற கருத்தமர்வில் பாரிய கருத்து மோதல் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வரும் நிலையில், ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
இதன் போதே இலங்கை பிரதிநிதிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் இடையில் ஐ.நாவில் பாரிய கருத்து மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்தின் போது அதிகளவான தமிழ் மக்கள் இலங்கை அரச படையினரால் கொல்லப்பட்டதாகவும், இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்த பட்டதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க தரப்பு பிரதிநிதி குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன், வைத்தியசாலை மீது குண்டுகள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பாலச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட யாரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
மாறாக அனைவரும் படுகொலை செய்யப்பட்டதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
எனினும், இதற்கு பதிலுரைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்றுள்ள ரியர் அட்மிரல் சரத் வீரசேகர நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதியின் குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.
மேலும், நாடு கடந்த அரசாங்கத்தின் பிரதிநிதி தமிழ் மக்களுக்கு சார்ப்பாக மட்டும் பேசுவதாகவும், விடுதலைப் புலிகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் ஆதரவாக பேசுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன், தான் படை வீரனாக இருந்தமையினால் இறுதி யுத்தத்தின் போது என்ன இடம்பெற்றது என்பது தனக்கு தெரியும் எனவும், தமிழ் மக்களுக்கு தாம் இரத்தம் வழங்கியிருந்ததாகவும் சற்று கோபத்துடன் தெரிவித்திருந்தார்.