அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் இன்று உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது : மக்களின் நன்மைக்காக கருத்து வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து மக்களுக்காக அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றிக்காட்டுவேன். தங்களுக்கு பணியாற்றுவதற்காகவே மக்கள் நம்மை தேர்வு செய்துள்ளனர். 20.40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை எனது நிர்வாகம் உருவாக்கி உள்ளது.
மெரிட் அடிப்படையிலான குடியேற்ற முறையை அறிமுகம் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. திறமையான, நமது சமூகத்திற்கு தனது பங்களிப்பை அளிக்கக் கூடிய, நாட்டிற்கு மரியாதை அளித்து நேசிக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமே க்ரீன் கார்டு வழங்கப்படும். அவர்களே இந்த நாட்டிற்கு தேவை.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை அமெரிக்கா தொடர்ந்து போராடும். அமெரிக்காவை பலமும், நம்பிக்கையும் பொருந்திய நாடாக மாற்றி அமைப்போம். உலக அளவில் பயங்கரவாத அமைப்புக்கள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற எதிரிகள் நமது பொருளாதாரம், தனித்தன்மை ஆகியவற்றிற்கு சவால் விடுவதாக உள்ளன. பயங்கரவாதிகள் கிரிமினல்கள் அல்ல. சட்டவிரோதமான எதிரிகள். அவர்கள் உலகம் முழுவதையும் கைப்பற்றுவதற்குள் அவர்களை பயங்கரவாதிகளாகவே கருதி அழிக்க வேண்டும்.
வடகொரியாவில் சர்வாதிகாரத்தை விட கொடூரமான ஆட்சி நடக்கிறது. அவர்கள் அணுஆயுதங்களை கொண்டு நமது நாட்டை விரைவில் மிரட்ட முயற்சிக்கிறார்கள். அப்படி நடப்பதற்குள் நாம் அவர்களுக்கு அதிகப்படியாக அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அவர்களை ஒடுக்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் பேசினார்.