ஆசிய கால்பந்தாட்ட கூட்டுசம்மேளனத்தினால் நடத்தப்படும் 2023 ஏ.எவ்.சி. ஆசிய கிண்ண கடைசி தகுதிகாண் சுற்றுக்கான சி குழு போட்டிகள் உஸ்பெகிஸ்தானின் நாமங்கன் மைதானத்தில் நாளை புதன்கிழமை (08) ஆரம்பமாகவுள்ளது.
உஸ்பெகிஸ்தான் (உலக தரவரிசையில் 83), தாய்லாந்து (111), மாலைதீவுகள் (156), ஆகியவற்றுடன் சி குழுவில் இலங்கை (205) இடம்பெறுகின்றது.
ஏ.எவ்.சி. ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் அறிமுக அணியாக இந்த வருடம் பங்குபற்றும் இலங்கை பெரிய அளவில் சாதிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
இக் குழுவில் இடம்பெறும் நாடுகளின் தரவரிசையின் பிரகாரம் இலங்கை மிகவும் பின்னிலையில் இருப்பதால் இந்த சுற்றுப் போட்டியில் மிகப் பெரிய சவாலை எதிர்கொள்ளவுள்ளது.
எவ்வாறாயினும் மென்செஸ்டர் சிட்டி கழகத்தின் முன்னாள் பின்கள வீரர் அண்டி மொறிசன் இலங்கை அணியின் புதிய பயிற்றுநராக பொறுப்பேற்ற பின்னர் ஐரோப்பிய கால்பந்தாட்ட உத்தி வீரர்களுக்கு பயிற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீரர்களின் ஆற்றல்கள், உடற்தகுதி, உற்சாகம் என்பவற்றில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.
கத்தார் 2022 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்த இலங்கை, அதன் பின்னர் நடைபெற்ற சாவ் சம்பியன்ஷிப்பில் ஒரு போட்டியிலும் வெற்றிபெறவில்லை.
எவ்வாறாயினும் மாலைதீவுகள், பங்களாதேஷ், சிஷெல்ஸ் ஆகிய அணிகளுடனான போட்டிகளில் இலங்கை திறமையாக விளையாடியிருந்தது.
அப் போட்டிகளில் இலங்கை அணியில் முக்கிய வீரராக இடம்பெற்ற அஹ்மத் வசீம் ராஸீக், சம்பளப் பிரச்சினையை காரணம் காட்டி இலங்கை அணியில் இணைய விரும்பவில்லை.
எவ்வாறாயினும் உஸ்பெகிஸ்தானுடன் நாளை நடைபெறவுள்ள போட்டியில் கோல் எல்லையைப் பாதுகாக்க வேண்டிய இக்கட்டான நிலையை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் தனது கௌரவத்தை காப்பாற்றும் வகையில் தடுத்தாடும் உத்தியை இலங்கை அணி கையாண்டு உஸ்பெகிஸ்தான் கோல் மழை பொழிவதைத் கட்டுப்படுத்தவுள்ளது.
அதேவேளை, தாய்லாந்து, மாலைதீவுகள் ஆகிய அணிகளுடன் தடுத்தாடலுடன் எதிர்த்தாடும் உத்தியையும் இலங்கை அணி கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாலைதீவுகளும் முதல் தடவையாக ஆசிய தகுதிகாண் சுற்றில் விளையாடுகிறது.
நாளைய போட்டியில் இலங்கையின் முதல் பதினொருவர் அணியில் இடம்பெறப்போகும் வீரர்கள் அறிவிக்கப்படவில்லை.
எனினும் குழாத்தில் இடம்பெறும் சிரேஷ்ட வீரர்கள் இறுதி அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோல் காப்பாளர்கள்: சுஜான் பெரேரா (தலைவர்), லக்ப்ரிய பெர்னாண்டோ, ருவன் அருணசிறி.
பின்கள வீரர்கள்: சத்துரங்க மதுஷான், ஹர்ஷ பெர்னாண்டோ, சலன சமீர, தர்மகுலநாதன் கஜகோபன், சரித்த ரத்நாயக்க, சமோத் டில்ஷான், அப்துல் பாசித், அபீல் மொஹமத்.
மத்திய கள வீரர்கள்: அசிக்கூர் ரஹுமான், செபஸ்தியான்பிள்ளை ஜேசுதாசன், மரியதாஸ் நிதர்சன், செபமாலைநாயகம் ஜூட் சுபன், மொஹமத் அமான், சசங்க டில்ஹார, மொஹமத் பஸால்.
முன்கள வீரர்கள்: டிலொன் டி சில்வா, மொஹமத் ஆக்கிப், மொஹமத் ஷிபான், ஷெனால் சந்தேஷ், ஷபீர் ரஸூனியா.
தலைமைப் பயிற்றுநர்: அண்ட்றூ மொறிசன், உதவிப் பயிற்றுநர்: கீத் ஸ்டீவன்ஸ், இடைக்கால உள்ளூர் பயிற்றுநர்: மொஹமத் ஹசன் ரூமி, உள்ளூர் உதவி பயிற்றுநர்கள்: இராஜமணி தேவசகாயம், மொஹமத் ரட்னம் ஜஸ்மின், கோல் காப்பாளர் பயிற்றுநர்: பி.வி.எஸ்.பி. தயாவன்ச, உடற்தகுதி ஆலோசகர்: மார்க்கஸ் பெரெய்ரா.