எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள `பாகுபலி-2′ வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் `பாகுபலி-2′ படத்தில், அதன் முதல் பாகத்தில் நடித்திருந்த பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக பாகுபலி-2 வெளியாக இருப்பதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் அதீத எதிர்பார்ப்பில் உள்ளனர்.
எனவே, `பாகுபலி-2′ வெளியாவதற்கு முன்பாக `பாகுபலி’ படத்தின் முதல் பாகத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், பாகுபலியின் முதல் பாகத்தை ஏப்ரல் 7-ஆம் தேதி மீண்டும் வெளியிட உள்ளதாக ராஜமவுலி தெரிவித்துள்ளார். அவ்வாறு ரிலீஸ் செய்வதன் மூலம் படத்தின் இரு பாகங்களின் தொடர்ச்சியையும் மக்கள் கண்டுகளிக்க வசதியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், படத்தை திரையரங்குகளில் காண நடிகர்கள் பிரபாஸ் மற்றும் ராணா ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடி வரை வசூலித்தது. எனவே பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகி உள்ள `பாகுபலி-2′ மாபெரும் வசூலை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என 4 மொழிகளில் உருவாகி உள்ளது. மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.