நீண்டகால அடிப்படையின் கீழ் எரிபொருள் இறக்குமதி, கொள்வனவு, நாட்டுக்குள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகள் தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை வலுவிழக்கச்செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுதந்திர சேவையாளர் சங்கம், அதன் தலைவர் சேத்திய பண்டார ஏக்கநாயக்க மற்றும் செயலாளர் பண்டார அரம்பேகும்புற ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதிக்கு பதிலாக சட்டமாதிபர், பிரதமர்,மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், சட்டமாதிபர் உள்ளிட்ட 28பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் தெரிவு செய்யப்படும் நிறுவனங்களுக்கு நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்தல்,நாட்டுக்குள் இறக்குமதி செய்தல், நாட்டுக்குள் விநியோகித்தல் மற்றும் விற்பனை செய்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதியளித்து அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக கடந்த ஜூன் 29ஆம் திகதி ஊடகங்கள் ஊடாக அறிந்துக்கொண்டதாக மனுதாரர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஜூன் 24ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட குறித்த அமைச்சரவை தீர்மானத்தின் படி நீண்டகால அடிப்படையில் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு எமது நாட்டுக்குள் நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்தல்,விநியோகித்தல் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவற்றிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்படும் அவ்வாறான நிறுவனங்களுக்கு எரிபொருளை களஞ்சியப்பத்தும் நடவடிக்கைகளுக்கும் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் ஆகியவற்றின் பொறுப்பில் உள்ள முனையங்களை வழங்குவதற்கும்,விநியோக நடவடிக்கைகளுக்காக தெரிவு செய்யப்படும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களை வேறுப்படுத்தவும், தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க விருப்பமான நிறுவனங்கள் எதிர்வரும் 16ஆம் திகதிக்கு முன்னர் தமது விருப்பத்தை அறிவிக்குமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சரவையின் குறித்த தீர்மானம் முற்றிலும் சட்டத்திற்கு முரணானது எனவும்,தான்தோன்றித்தனமானது எனவும் மனுதாரர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இவ்வாறான தீர்மானமொன்றை எடுக்க அமைச்சரவைக்கு அதிகாரமில்லை என கூறும் மனுதாரர்கள் அந்த தீர்மானம் ஊடாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டத்தின் விதிவிதானங்கள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்