என் வாழ்க்கையை மாற்றியது ‘காக்க காக்க’- சூர்யா நெகிழ்ச்சி
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, ஜீவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘காக்க காக்க’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருந்தார். தாணு தயாரித்திருந்த இப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி 2003ம் ஆண்டு வெளியானது.
13ம் ஆண்டுகள் ஆனதை ஒட்டி இயக்குநர் கெளதம் மேனன் “‘காக்க காக்க’ எனக்கு ஒரு ஸ்பெஷலான படம். சூர்யாவின் தீவிர ஈடுபாடு இல்லையென்றால் சாத்தியமாகி இருக்காது. அப்படம் நிறைய போலீஸ் அதிகாரிகளுக்கு உத்வேகம் அளித்தது குறித்து மகிழ்ச்சி. படக்குழுவினருக்கு நன்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
கெளதம் மேனனின் இந்த ட்வீட்டை மேற்கோள்காட்டி “‘காக்க காக்க’ படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றன. எனக்கும் ஜோதிகாவுக்கும் மிகவும் பிடித்த படம். என் வாழ்க்கையையே மாற்றிய படம்” என்று பதிலளித்திருக்கிறார் சூர்யா.
சூர்யாவின் இந்த பதிலால் மீண்டும் கெளதம் மேனன் – சூர்யா இருவரும் இணைந்து படம் பண்ணும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக தமிழ் திரையுலகினர் தெரிவித்து வருகிறார்கள்.