இந்திய உயர் ஸ்தானிகரின் தலையீட்டுடன் எமது நாட்டு கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிக்கொள்ளவே ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சி காரியாலயத்துக்கு அழைத்திருந்தேன்.
மாறாக இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் ராெஷான் ரணசிங்கவுடன் இணைந்து அரசியல் சதி செய்ய முயற்சிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் தொடர்பில் பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபையை நீக்கி, புதிய நிர்வாக சபை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சி இணைந்து பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
ஆனால் தற்போது இந்த பிரேரணையை காலால் உதைத்துவிட்டு, கிரிக்கெட் சபையின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்திய நபரை நீக்கிவிட்டு திருடிய குழுவை பாதுகாத்து இருக்கிறது.
ஜனாதிபதி ராெஷான் ரணசிங்கவை பதவி நீக்கிவிட்டு முழு அமைச்சரவைக்கும் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது.
அதாவது, கலவெடுத்ததற்கு பராவாயில்லை. திருடர்களை பிடிக்கவேண்டாம். அனைத்துக்கும் ஆமாம் என்று சொன்னால் தங்களின் இருப்பை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற செய்தியையே ஜனாதிபதி விடுத்திருக்கிறார்.
அத்துடன் இன்று 225 பேரும் நிறைவேற்று அதிகாரியின் இரும்பு சப்பாத்துக்களால் நசுக்கப்பட்டிருக்கின்றனர்.
சுகாதாரத்துறையில் இடம்பெற்றுவரும் மோசடி மற்றும் முறைகேடுகள் காரணமாக சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாங்கள் கொண்டு வந்திருந்தோம்.
இதன்போது சுகாதார அமைச்சரை பாதுகாக்குமாறு அரச தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் வெளியில் அழுத்தங்கள் அதிகரித்தபோது, அவரை பாதுகாக்க அமைச்சுப்பதவியை மாற்றினார்கள்.
பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தை சற்றேனும் மதிப்பதில்லை. தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கி இருந்தது.
அந்த தீர்ப்பை புறந்தள்ளி இருக்கிறது. ஊழல் மிக்க கிரிக்கெட் சபையை நீக்குமாறு பாராளுமன்றம் பிரேரணை ஒன்றை நிறைவேற்றியிருந்தது. அதனையும் புறந்தள்ளியுள்ளது.
இந்த ஜனாதிபதியை நியமித்துக்கொண்டது பாராளுமன்றத்தில் 134 பேரேயாகும். ஆனால் அவரை மறைமுக சக்தி ஒன்று இயற்றிக்கொண்டிருக்கிறது.
நாட்டில் இருக்கும் காஸ் மாபியா, மருந்து மாபியா தற்போது கிரிக்கெட் மாபியா இவர்களே யார் அமைச்சு பதவியில் இருக்க வேண்டும் என தீர்மானிக்கின்றனர்.
மேலும் இந்திய உயர் ஸ்தானிகர் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் என்னுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ராெஷான் ரணசிங்கவையும் அழைத்துக்கொண்டு இந்திய உயர் ஸ்தானிகரின் தலையீட்டுடன் எமது நாட்டு கிரிக்கெட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கிக்கொள்ளவே முயற்சித்தேன். மாறாக இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் ராெஷான் ரணசிங்கவுடன் இணைந்து அரசியல் சதி செய்ய முயற்சிக்கவில்லை.
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறினார் என தெரிவித்து ராெஷான் ரணசிங்கவை பதவி நீக்கம் செய்வதாக இருந்தால், தற்போதைய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் பலர் என்னை சந்திக்க வருகிறார்கள் அப்படியாயின் அவர்களையும் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி சதித்திட்டம் செய்து ஆட்சி அதிகாரத்தை பெறப்போவதில்லை. மக்கள் ஆணையின் மூலமே ஆட்சி அதிகாரத்தை பெறுவோம், கடந்த பொதுத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிபதிக்கு கொழும்பு மாவட்டத்தில் 30 ஆயிரம் வாக்குகளே கிடைத்தன. ஆனால் ராெஷான் ரணசிங்கவுக்கு 90 ஆயிரத்தி 600 விருப்பு வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன. வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் ஆணை கிடைக்காத ஜனாதிபதியால், மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்றார்.